ஸ்ரீலங்கா இராணுவம் தொடர் போர்ப் பயிற்சியில்!

66shares

ஸ்ரீலங்காவிற்கு எழக்கூடிய எந்தவொரு அச்சுறுத்தல்களையும் சமாளிப்பதற்குத் தேவையான தயார்படுத்தல் பயிற்சிகளில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேவேளை நாட்டின் தேசிய பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் இராணுவம் உட்பட முப்படையினர், பொலிசார், சிவில் பாதுகாப்புப் படையினர் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானியாக கடமையாற்றிவரும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருக்கின்றார்.

ஸ்ரீலங்காவில் ஆட்சிமாற்றம் இடம்பெற்றதை அடுத்து இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் “புதிய நாட்டிற்கான இராணுவ துரு மிதுரு” என்ற நாடு தழுவிய ரீதியில் மரநடுகை மற்றும் கைவிடப்பட்ட வயல்நிலங்களில் மீண்டும் பயிர்ச்செய்கைளை ஆரம்பிக்கும் திட்டத்தின் ஒரு அங்கம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா இராணுவத் தளபதியும், பதில் படைகளின் பிரதானியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் இன்று காலை இடம்பெற்ற இந்த நிகழ்வில் இராணுவப் படைத் தளபதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது அங்கு கூடியிருந்த ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட இராணுவத் தளபதி, ஸ்ரீலங்கா படையினர் தமது படைபலத்தை அதிகரிப்பதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார்.

இது தொடர்பில் ஷவேந்திர சில்வா கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டு மக்களின் பாதுகாவலனாக ஸ்ரீலங்கா இராணுவம் தேவையான பாதுகாப்பினை வழங்கிக்கொண்டிருக்கிறது. அதே போல மக்களுக்குத் தேவையான பாதுகாப்பினை தொடர்ந்தும் வழங்கிக் கொண்டு வருகின்றது.

ஸ்ரீலங்கா இராணுவம் நாட்டிற்கு பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்குத் தேவையான பயிற்சிகளையும் தொடர்ந்தும் மேற்கொண்டுவருகிறது. இராணுவத்தின் பல்வேறு படையணிகளும் நாட்டிலுள்ள பல பயிற்சி முகாம்களில் பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. எதிர்காலத்தில் எமக்கு எதிர்பாராத வகையில் வருகின்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல் பயிற்சிகளையே செய்து வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டின் முன்னேற்றத்திற்காக கைவிடப்பட்ட வயல் நிலங்களில் மீண்டும் பயிரிடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இளைய தலைமுறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஸ்ரீலங்கா இராணுவம் உட்பட அரச படைகள் வழங்கும் என்றும் இராணுவத் தளபதி ‘ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதற்கமையவே இன்றைய தினம் கொழும்பு பத்தரமுல்லை பகுதியிலுள்ள மத்திய சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை சந்தியில் இருந்து புதிதாக நிரமாணிக்கப்பட்ட ஸ்ரீலங்கா இராணுவத் தலைமையகம் வரையான வீதியின் இரு மருங்கிலும் உள்ள 12 ஏக்கர் விஸ்தீரனமான கைவிடப்பட்ட வயல் நிலங்களில் மீண்டும் பயிர்ச்செய்கையை ஆரம்பிக்கும் நிகழ்வை ஆரம்பித்து வைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

Tags : #Sri Lanka #Army
இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

தவறான தகவல் -ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை

தவறான தகவல் -ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்