சஜித் குழுவுக்கு வைக்கப்பட்டது ஆப்பு!

195shares

தற்போதைய சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் எந்தவொரு மாற்றத்தினையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவரத்ன தெரிவித்துள்ளார்.

சிறிக்கொத்த கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்கு பௌத்த வாக்குகள் இல்லையென நாம் தெளிவாக கூறினோம். அதற்கு பல காரணங்கள் இருந்தன. இருப்பினும், கட்சியிலுள்ள ஒரு குழுவினர் அவருக்குத்தான் பௌத்த வாக்குகளைப் பெற முடியும் என பிடிவாதம் பிடித்தனர். இதனால், அந்த வாய்ப்பை அவருக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வழங்கினோம். பிரதிபலனையும் கண்டோம்.

இதனால், தற்பொழுது பௌத்த வாக்குகளைப் பெறுவதற்கான பணியை ரணில் விக்ரமசிங்கவுக்கு விடுமாறு இப்போது கேட்டுக் கொள்கின்றோம். இதனை மறுப்பவர்கள் கட்சியிலிருந்து வெளியே செல்லலாம். இல்லாவிடின், சஜித்துக்கு வேட்பாளர் பதவியை வழங்கியதனால் தவறிப் போன பௌத்த வாக்குகளை ஈடுசெய்வதற்கு கட்சியிலிருந்து நடவடிக்கை எடுக்கலாம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் எந்தவொரு மாற்றமும் இடம்பெறக்கூடாது. அதனை மேற்கொள்ளவும் கூடாது. அது ஐக்கிய தேசியக் கட்சியின் வளர்சிக்காக எடுக்க வேண்டிய முக்கியமான தீர்மானமொன்றாகும். அதனால் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவுக்கு கட்சித் தலைமையினை மாற்றுவதற்கோ பதவி நீக்குவதற்கோ அதிகாரம் இல்லை.

இன்னும் 3 மாதங்களில் பொதுத் தேர்தலுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. அந்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்றுக்கு தேர்வாகும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்த கட்சியின் பிரதான உறுப்பினர்கள் கட்சியின முன்நோக்கி கொண்டு செல்வதற்காக செயற்பட வேண்டியுள்ளது.

அதனால் கட்சித் தலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனத் தெரிவிக்கும் அனைத்து சவால்களையும் நாம் தோற்கடிப்போம் என்பதை நான் மிகத் தெளிவாக தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


இதையும் தவறாமல் படிங்க
loading...