சுவிஸில் இருந்து சென்ற முன்னாள் போராளியிடம் மூன்று இலட்சம் மோசடி? கோட்டாபயவிடம் முறைப்பாடு!

453shares

சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து கடந்த நல்லாட்சி அரசாங்கத்தை நம்பி இலங்கைக்கு சென்று மட்டக்களப்பில் வாழ்ந்துவரும் முன்னாள் போராளி குடும்பம் ஒன்றிற்கு அரச அதிகாரி ஒருவரினால் மிகக்கடுமையான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த சபாநாயகம் ஜெந்தரூபன் (கலைவாணன்) என்ற முன்னாள் போராளிக்கே இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்.

‘கடந்த நல்லாட்சி அரசாங்கத்தை நம்பி நான் எனது குடும்பத்துடன் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து வாழ்ந்து வருகின்றேன்.

என்னை மோசடி செய்து பணத்தை பெற்று ஏமாற்றிய அரச அதிகாரி ஒருவருக்கு எதிராக ஊடகங்களில் கருத்து தெரிவித்ததற்காக என்னை பொலிசார் முதல் கொண்டு புலனாய்வு துறைவரை பலமுறை துருவி துருவி விசாரணை செய்து வருகின்றனர்.

என்னால் சவுக்கடிப் பிரதேசத்தில் வாங்கப்பட்ட காணியை அரச காணி என்றும், அதற்கு காணி அனுமதி பத்திரம் பெற்று தருவதாகவும் கூறி அரச அதிகாரிகள் என்னிடம் இருந்து மூன்று இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு வேறு ஒருவரின் பெயரில் பற்றுச்சீட்டுக்களை தந்தார்கள்.

ஏன் வேறு பெயரில் பற்றுச்சீட்டுக்களை தருகிறீர்கள் என்று கேட்டபோது இதனை உங்களது பெயரில் மாற்றி தருகிறோம் அதற்கு ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சமாக கேட்டனர்.

நான் இதற்காக பல அதிகாரிகளிடம் நீதி கேட்டு சென்றேன். முடியாத நிலையில் மட்டக்களப்பு கச்சேரிக்கு முன்னால் உண்ணாவிரதம் இருந்தேன்.

அதன் பின்னர் மாவட்ட அரசாங்க அதிபர் உதயகுமார் இது குறித்து விசாரணை நடத்தினார். ஆனால் கடைசியாக ஆவணங்களின் படி குறித்த காணிக்கு 2000ம் ஆண்டே வீரகத்தி பாக்கியம் என்பவரின் பெயரில் காணி அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் எனவே நாங்கள் வழங்கிய பணத்திற்கு வழக்கு தொடருமாறும் எமக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

2000ம் ஆண்டு வேறொருவரின் பெயரில் உள்ள காணிக்காக 2015 ம் ஆண்டு ஏன் என்னிடம் மூன்று இலட்சம் ரூபாய் பணத்தை பிரதேச செயலகம் பெற்றுக் கொண்டது என்று தெரியவில்லை? அதுவும் காணிக்கான அனைத்து பணத்தையும் என்னிடம் பெற்றுக்கொண்டு வீரகத்தி பாக்கியம் என்ற பெயரில் எனக்கு அனுமதிப் பத்திரமும் வழங்கியுள்ளனர்.

ஆனால் வீரகத்தி பாக்கியம் என்ற எந்த ஒரு நபரும் இங்கு இல்லை. நான் வாங்கி பராமரித்த காணிக்கு அனுமதி பத்திரம் பெறுவதற்கு அவர்கள் கேட்ட ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் வழங்காததால் என்னை பழிவாங்குவதற்கு எனது மூன்று இலட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு வேறு ஒருவரின் பெயரில் காணி அனுமதி பத்திரத்தை குறிப்பிட்ட பிரதேச செயலாளர் தயாரித்துள்ளார். அதுவும் 2000 ஆண்டு வழங்கப்பட்டதாக ஆவணங்களையும் தயார் செய்துள்ளனர்.

இது குறித்து முறையாக விசாரணை செய்யாது உயர் அதிகாரிகள் இந்த சம்பவத்தை மூடி மறைக்க பார்க்கின்றனர்.

அரச திணைக்களம் ஒன்றில் என்னிடம் இருந்து அறவிடப்பட்ட மூன்று இலட்சம் ரூபாய் பணத்திற்கு நான் ஏன் தனியார் வழக்கு போட வேண்டும்? என்னிடம் இருந்து காசை அறவிட்ட அரச அதிகாரிகள் முதல் கொண்டு என்னிடம் இலஞ்சம் கோரிய உயர் அதிகாரிவரை விசாரணை செய்யப்பட வேண்டும். இதனை புதிய ஜனாதிபதி அவர்கள் கவனத்தில் எடுத்து நீதியை பெற்று தரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

இதற்காக என்னை செங்கலடி பிரதேச செயலாளர் ஏறாவூர் பொலிஸார் ஊடாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தி நான் பிணையில் விடுதலை செய்யப்பட்டேன்” என தெரிவித்துள்ளார்.

இந்த முன்னாள் போராளி குடும்பம் 2004 ம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறி சுவிஸ் நாட்டில் வதிவிட உரிமை பெற்றனர். பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தை நம்பி 13 வருடங்களின் பின்னர் 2017 ம் ஆண்டு இலங்கைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லாட்சி அரசாங்கத்தை நம்பி இலங்கைக்கு வந்து தங்களது வாழ்வாதாரத்தை நடத்த முட்பட்டபோது அவர்களுக்கு எதிராக அரச அதிகாரிகள் மிக மோசமாக செயற்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

தனக்கு நடந்த அநீதிக்கு நியாயம் கேட்டு சென்ற ஜெந்தரூபனை( கலைவாணனை) செங்கலடி பிரதேச செயலக அதிகாரிகள் பல தடவைகள் ஏமாற்றியதுடன் அவரை மனநிலை சரியில்லாதவர் என்று கூறியுள்ளனர்

இலங்கைக்கு சென்று மீண்டும் நிம்மதியாக வாழ முடியும் என்று நம்பி சுவிசில் இருந்து வந்த அந்த அந்த முன்நாள் போராளியை கடந்த மாதம் 13 ம் திகதி ஏறாவூர் பொலிஸார் கைது செய்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் நிறுத்தினர்.

அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கிய போதும் அவரது காணிக்கான நீதியை மட்டக்களப்பு அரசாங்க அதிபரால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்பதோடு செங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக ஒரு முறையான விசாரணையை கூட நடத்தமுடியவில்லை என்று அவரது தரப்பில் இருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

பாதிக்கப்பட்ட குறித்த சுவிஸ் குடும்பத்திற்கு இரண்டு பிள்ளைகள் உண்டு அதில் மூத்த பெண் பிள்ளை சுவிஸ் நாட்டில் பிறந்து சுவிஸ் குடியுரிமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

வெளியேறிய  ரணில் மற்றும் சுமந்திரன்!

வெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்!