மகிந்த - கோட்டாபயவிற்கு எழுந்துள்ள சவால்! ரஞ்சனின் நாடாளுமன்ற உரையால் ஏற்பட்டுள்ள சிக்கல்

118shares

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உரை தொடர்பில் தற்போது பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரஞ்சன், பல்வேறு தகவல்களை வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன், இன்றைய தினம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மதுபானசாலை அனுமதி பத்திரம் உள்ள 100 எம்பீக்கள் பற்றி சொன்னார். போதை வியாபாரம் செய்யும் 2 எம்பீக்களை பற்றி சொன்னார். சூது வியாபாரம் செய்யும் எம்பீயை பற்றி சொன்னார். கொகெயின் புகைக்கும் எம்பீகளை பற்றி சொன்னார்.

பிரதமர் மகிந்தவுடன் நடத்திய உரையாடல்களை பற்றி சொன்னார். "உன்னை சிறையில் இருந்து நான்தான் வெளியில் எடுத்தேன். நன்றியுடன் இரு" என்று மஹிந்த சொன்னதாக ரஞ்சன் சொன்னார். மகிந்தவுடன் நடத்திய மொத்தம் ஏழு உரையாடல்கள் தன்னிடம் இருப்பதாக சொன்னார்.

2005ம் வருடம் இலங்கை வந்த நடிகர் ஷாருக்கானை நோக்கி வீசப்பட்ட குண்டின் பின் யார் இருக்கிறார்கள் என எம்பி உதய கம்மன்பிலவிடம் கேட்கும்படி சொன்னார்.

கிரிகட் போட்டி முடிவுகளை நிர்ணயம் செய்கிறார் என எம்பி திலங்க சுமதிபாலவை பற்றி சொன்னார்.

பிரதமர் யோகம் கிடைக்கும் என்று ஜோசியர் சொன்னதால், தன்னை விவாகரத்து செய்து விட்டு, இன்னொரு அமைச்சரின் மனைவியை கல்யாணம் செய்த ஒரு அமைச்சரை பற்றி, அவரது முன்னாள் மனைவி சொன்னதை சொன்னார். இன்னமும் பல அமைச்சர்களின் மனைவிகள் பேசிய உரையாடல்களை பற்றி சொன்னார்.

அர்ஜுனா அலோசியசின் பென்த்ஹவுஸின் (Penthouse Apartment) கதவை தட்டிய போது திறந்த பெண்மணி யாருடைய மனைவி என சொன்னார்.

பிணைமுறி வழக்கின் பிரதான சந்தேக நபர் தனக்கு லஞ்சம் வழங்க பேசிய உரையாடல் பற்றி சொன்னார்.

இன்னமும் பல கேளொலி, காணொளி ஆதாரங்கள், உள்நாட்டு, வெள்நாட்டு பாதுகாப்பு பெட்டகங்களில் இருப்பதாகவும் சொன்னார்.

தன் மாமா விஜய குமாரதுங்கவை போல் தன்னையும் கொலை செய்தால், அந்த ஆதாரங்கள் உடன் வெளிவரும் வண்ணம், தான் ஏற்பாடு செய்து இருப்பதாகவும் ஒரு அதிர்ச்சி குண்டை அவர் சபையில் வீசினார்.

'எனது ஒலிநாடாக்களில் வெளியாகியுள்ள விடயங்களை பற்றி ஆராய ஒரு ஆணைக்குழு நியமியுங்கள். அனைத்து ஆதாரங்களையும் அள்ளி வழங்குகிறேன். ஆணைக்குழு நியமிக்க முடியுமா?' என ஜனாதிபதி, பிரதமர் இருவரை விளித்து ஒரு சவாலையும் ரஞ்சன் விடுத்தார்.

அவரது கைபேசியில் நிரந்தரமாக 'Recording App' ஐ 'On' செய்து வைக்க வேண்டிய தேவை இருந்ததால், தனிப்பட்ட உரையாடல்களும் பதிவாகி விட்டன என்று என்னிடம் சொன்னார். அதற்காக அவர் பொது மன்னிப்பும் கேட்டுகொண்டார்.

இனி அவரது தனிப்பட்ட உரையாடல்களை பற்றி எவரும் பெரிதும் அலட்டிக்கொள்ள போவதில்லை.

ஆனால், அவருடன் உரையாடிய, இன்றைய அரசின் பல, அன்றைய அரசின் ஒருசில, "பெரிய" மனிதர்கள் தான் ஆடிப்போயுள்ளனர்.

ரஞ்சன் என்ற பூதத்தை “ஜீபூம்பா” என மந்திரம் போட்டு ஜாடியிலிருந்து வெளியில் எடுத்தோர், இப்போது அதை மீண்டும் எப்படி ஜாடிக்குள் போடுவது என்ற மந்திரத்தை மறந்து தடுமாறுகின்றனர்.

பூதத்தையும் போட முடியாது. அவரையும் போட முடியாது. இதுதான் சிக்கல்.

ரஞ்சன் உண்மையை பேசி சுய விளக்கம் அளித்தார். தனக்கு சொந்த வீடு கூட இல்லை. தான் நினைத்திருந்தால், ரகசியங்களை விலை பேசி விற்றிருக்கலாம். அதை செய்யவில்லை. பாதிக்கப்பட்ட தரப்பின் பக்கத்திலேயே எப்போதும் இருந்தேன் என்றார்.

ரஞ்சன் பேசி முடித்த பிறகு, என்னிடம் வந்து, ‘சிறு குற்றம்’ ஒன்றை செய்ததால், இன்று தன்னுடன் சிறையில் இருக்கும், கொழும்பை சேர்ந்த நானறிந்த ஒரு நபரை பற்றி சொன்னார். அந்த கைதியின் குடும்பத்துக்கு உதவி செய்யும்படி அவர் என்னிடம் கூற சொன்னதாக, ரஞ்சன் என்னிடம் சொன்னார்.

“நானறிய இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் இந்தளவு வெளிப்படுத்தல் (Revelation) உரையை நான் கேட்டதில்லை. நானும் 2001ம் ஆண்டு முதல் 15 வருடங்கள் பாராளுமன்றத்தில் இருக்கிறேன்.

நீ அடையாளம் காட்டிய எந்தவொரு பாவச்செயலையும் செய்யாத அனைத்து கட்சிகளையும் சார்ந்த ஒருசில எம்பிக்களின் நானும் ஒருவன் என்பதில் நான் பெருமை அடைகிறேன்” என்று கூறி நண்பன் ரஞ்சனின் கையை நான் குலுக்கினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்