தமிழ் மாணவர்கள் கடத்தல்; வசந்த கரன்னாகொட, டி.கே.பி தசநாயக்கவின் வழக்கு தொடர்பில் கடும் கண்டன தெரிவித்துள்ள சட்டவல்லுநர்!

84shares

கடற்படையின் முன்னாள் தளபதியான ஓய்வுபெற்ற அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் ரியர் அட்மிரல் டி.கே.பி தசநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைகளை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று வழங்கியுள்ள பரிந்துரைக்கு எதிராக சட்டவல்லுநரான லால் விஜேநாயக்க தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய பிரதமரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2015ஆம் ஆண்டிற்கு முன் இருந்த பயங்கரமான நிலைமையை விட இப்போது நாட்டின் நிலை மோசமாகி வருவதாகவும் அவர் எச்சரித்தார். தமது விசாரணைகள் நிறைவுபெறும் வரை கடற்படையின் முன்னாள் தளபதியான ஓய்வுபெற்ற அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் ரியர் அட்மிரல் டி.கே.பி தசநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைகளை இடைநிறுத்துமாறு அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு, சட்டமா அதிபருக்கு அண்மையில் அறிவித்திருந்தது.

2015 ஜனவரி 8ஆம் திகதி முதல் 2019 நவம்பர் 16ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்ந்து தகவல்களைத் திரட்டுவதற்காக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் விசேட வர்த்தமானி அறிவித்தலினூடாக ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

கொழும்பு தெஹிவளை மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் ஐந்து தமிழ் மாணவர்களட் உட்பட 11 பேரைக் கடத்திச்சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் வசந்த கரன்னாகொட மற்றும் டி.கே.பி தசநாயக்க ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பிலும் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

அந்த வழக்கில் அரசியல் அழுத்தத்திற்கு ஏற்ப நீதிமன்றத்தில் சட்டரீதியிலான நடவடிக்கையை ஆரம்பிப்பது தொடர்பில் ஆணைக்குழு அதிக கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல் மற்றும் படையினரை பழிவாங்கும் படலத்தில் ஓரங்கமாக நல்லாட்சி அரசாங்கம் புலனாய்வு அதிகாரிகளையும் படை அதிகாரிகளையும் சிறைதள்ளியிருப்பதாக அப்போது எதிர்கட்சியாகவும், தற்போது ஆளுங்கட்சியாகவும் இருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் தெரிவித்து வந்தனர்.

இதற்கு ஏற்றவகையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பல வருடங்களாக இந்த கடத்தல் வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருகின்ற நிலையில் இதில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, கடற்படை முன்னாள் பேச்சாளர் ரியர் அட்மிரல் தசநாயக்க உட்பட 16 சந்தேக நபர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருவதோடு, ஓய்வுபெற்ற முப்படைகளின் தளபதியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இப்படியான நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு வழங்கியிருக்கும் பரிந்துரையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள சட்டவல்லுநரான லால் விஜேநாயக்க, 2015ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்த நிலைமையை விடவும் இப்போது இருக்கின்ற நாட்டின் நிலைமை பாரதூரமாக உள்ளதாக குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடற்படையின் உயர் அதிகாரிகளான வசந்த கரன்னாகொட மற்றும் டி.கே.பி தஸநாயக்க ஆகியோருக்கு எதிராக 11 பேர் கடத்தல் வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. நீண்டகலமாக விசாரணையில் இருந்துவரும் வழக்கு இது. அவர்கள் தவறு இழைத்துள்ளார்களா இல்லையா என்பது எமக்குரிய பிரச்சினையில்லை. எனினும் 2015ஆம் 2019ஆம் ஆண்டுகளிடையே அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டோர் தொடர்பில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவானது, இந்த விசாரணையை மேற்கொண்டு நடத்திச்செல்ல வேண்டாம் என்ற பரிந்துரையை சட்டமா அதிபருக்கு விடுத்திருக்கின்றது.

இது மிகவும் பயங்கரமான நிலைமையாகும். நீதிமன்றத்திற்கு மேலே உத்தரவிடக்கூடியவர்கள் இன்று இருக்கின்றார்கள். அப்படிசெய்ய முடியாது. இடமளிக்கவும் கூடாது. நீதிமன்றம் குறித்து பிரச்சினை இருந்தால் வழக்கு குறித்து பிரச்சினை இருந்தால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அதுகுறித்து கூறவேண்டும். ஏன் இவர்களை தடுப்பில் வைத்திருக்கிறீர்கள்? விடுதலை செய்யுங்கள் என்று கோரிக்கை முன்வைக்க முடியும்.

அவ்வாறு நீதிமன்றம் வழங்கும் முடிவுகளை சவாலுக்கு உட்படுத்தி மேன்முறையீடு செய்யவும் உரிமையிருக்கிறது. வழக்கொன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் அதுகுறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கே முழு அதிகாரமும் இருக்கிறது. மாறாக வேறு தரப்பினருக்கு அல்ல. ஜனாதிபதியோ அல்லது சட்டமா அதிபருக்கோ அந்த அதிகாரம் கிடையாது.

இதற்கு முன்னர் இப்படியான நிலைமை நாட்டில் ஏற்பட்டதே இல்லை. ஜனநாயகம், நீதிமன்ற சுயாதீனத்துவம், சட்ட அதிகாரம் என்பவற்றை மதிக்கின்ற நாடுகளில் இப்படியான நிலைமை ஏற்படக்கூடாது. அதனால் 2015ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்த நிலைமையை விடவும் பயங்கரமான நிலைமையே இப்போது இருக்கிறது.

இந்த குறுகிய காலத்தில் இவ்வாறான பயங்கரமான நிலைமை ஏற்பட்டுள்ளதால் அதனை தொடரச் செய்வதற்கு இடமளிக்கக்கூடாது. இதற்கெதிராக சட்டத்தரணிகள் சங்கம், இப்போதுங்கூட ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம், மக்கள் சட்டத்தரணிகள் சங்கம் ஆகியன தலையீடு செய்துள்ளன. சட்டத்தரணிகள் சங்கமும் தலையீடு செய்ய வேண்டும். மக்களும் இதற்கெதிராக தலையீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

வெளியேறிய  ரணில் மற்றும் சுமந்திரன்!

வெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்!