வெள்ளை வான் விவகாரம்! அதிரடியாக கைது செய்யப்பட்ட புலனாய்வு அதிகாரிகள்!

85shares

வெள்ளை வான் கடத்தல் வழக்கின் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஊடக சந்திப்பை நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு ஸ்ரீலங்கா கடற்படை புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்றைய தினம் கைதுசெய்யப்பட்ட ஸ்ரீலங்கா கடற்படை புலனாய்வாளர்கள் இருவரும் கொழும்பு மேலதிக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலிலும் வைக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்த காலப்பகுதியான 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் கொழும்பு தெஹிவளை - கொட்டாஞ்சேனை ஆகிய பிரதேசங்களில் வைத்து ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் வெள்ளை வேனில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டனர்.

இதுதொடர்பிலான வழக்கு விசாரணை கடந்த வருடங்களாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருவதோடு ஸ்ரீலங்கா கடற்படையைச் சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டு தற்போது பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே தாய்நாட்டிற்கான படையினர் அமைப்பின் தலைவரும் ராஜபக்ச சகோதரர்களின் விசுவாசியுமான ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் அஜித் பிரசன்ன தலைமையில் கடந்த டிசெம்பர் 06 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா கடற்படை புலனாய்வாளர்கள் இருவரும் இணைந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் பக்கச்சார்பாக இடம்பெறுவதாக குற்றம்சாட்டியிருந்த பிணையில் விடுதலைபெற்றிருக்கும் கடற்படை புலனாய்வாளர்கள், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான கருத்துக்களையும் வெளியிட்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த வழக்கில் சாட்சியாளர்களாக முன்வந்திருப்பவர்கள் குறித்தும் சில கருத்துக்களைப் பதிவுசெய்திருந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டிற்காக மேஜர் அஜித் பிரசன்னவை கைது செய்து நீதிமன்றில் நிறுத்தியிருந்தனர். அதற்கமைய அவருக்கு நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவையும் பிறப்பித்திருந்தது.

இதனிடையே இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்த கடற்படை புலனாய்வாளர்களான அருண துஷார மெண்டிஸ் மற்றும் கஸ்தூரிகே காமினி ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்பாக இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கில் நான்காவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளியும் கடற்படை உளவுத்துறை உறுப்பினருமான டீ.எம். விஜயகாந்தனைக் கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சி.ஐ.டி யினர் மன்றில் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதன்போது மன்றில் பிரசன்னமாகியிருந்த கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன, குறித்த மூன்று சந்தேக நபர்களும் ஊடக சந்திப்பை நடத்தி சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் கருத்துக்களை முன்வைத்திருந்ததாக நீதவானிடம் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கீடு செய்த பிரதிவாதிகள் சார்பிலான ஜனாதிபதி சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன, குறித்த சந்தேக நபர்கள் எந்த வழக்கு விசாரணை பாதிக்கப்படும் வகையில் பேசியுள்ளார்கள் என்பது மன்றில் தெரிவிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கை விசாரணை செய்த பொலிஸ் பரிசோதகரான நிஷாந்த டி சில்வா தற்போது நாட்டை விட்டு வெளியேறியிருப்பதாக குறிப்பிட்ட கடற்படை புலனாய்வாளர்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, இந்த வழக்கை விசாரணை செய்யாமல் சந்தேகநபர்களை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இருப்பினும் இந்த கோரிக்கையை நிராகரித்த கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே கடற்படை புலனாய்வாளர்கள் இருவரையும் எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அதேவேளை சர்ச்சைக்குரிய ஊடக சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களை செம்மையாக்கலுக்கு உட்படுத்தாமல் முழுமையான அறிக்கையாக அடுத்த விசாரணையில் சமர்பிக்குமாறும் இரகசிய பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


இதையும் தவறாமல் படிங்க
இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

வெளியேறிய  ரணில் மற்றும் சுமந்திரன்!

வெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்!