சுய இலாப அரசியலுடன் செயற்படுகிறார் கஜேந்திரகுமார் - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பகிரங்க குற்றச்சாட்டு

23shares

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை பிரித்து சுயலாப அரசியல் செய்யும் கஜேந்திரகுமார், தேர்தலிலும் போட்டியிட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர்கள் இவ்வாறான குற்றச்சாட்டினை பகிரங்கமாக முன்வைத்தனர்.

குறித்த ஊடக சந்திப்பு இன்று காலை 11.30 மணியளவில் கிளிநாச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இவ் ஊடக சந்திப்பிலேயே அவர்கள் மேற்கண்டவாறு குற்றம் சாட்டினர்.

குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்காக நாம் நீண்டகால போராட்டத்தினை தொடர் போராட்டமாக முன்னெடுத்து வருகின்றோம். இந்த நிலையில் குறித்த போராட்டத்தினை பாதிப்படைய செய்யும் வகையிலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையிலும் இன்று அரசியல்வாதிகளுக்கு எதிராக போராட வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்தை சிதைத்தும், பிரித்தும் புதிய அமைப்புக்களை உருவாக்கும் செயற்பாடுகளில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஈடுபட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தில் கஜேந்திரகுமார் அணியினர் இவ்வாறான செயற்பாட்டை ஆரம்பித்துள்ளனர். குறித்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட தாய்மார் குரல் எழுப்பவில்லை. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தமது குரலை எழுப்பியிருந்தால் நாமும் அவர்களுடன் இணைந்திருப்போம். அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் கஜேந்திரகுமாரின் அமைப்பாளர் ஒருவரே மக்கள் சார்ந்து குரலினை எழுப்பியிருந்தார். உண்மையில் குறித்த செயற்பாடு பலராலும் பேசப்பட்டது.

கஜேந்திரகுமார் கொழும்பில் வளர்ந்தவர். அவர் தென்னிலங்கை மக்களோடு தனது உறவுகளை அதிகமாக வளர்த்தவர். இன்று தமிழ் மக்களுக்கு ஏதோ செய்யப்போவதாக கூறிக்கொண்டு இன்று இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்.

இவர் இந்தியாவில் திருமணம் செய்து பிள்ளைகளை வெளிநாடுகளில் வளர்க்கின்றார். பிள்ளைகள் வெளிநாட்டு பிரஜைகளாக வளர்க்கப்படுகின்றனர். இவ்வாறான நிலையில் எமது பிரச்சினைகளை இவர் தமது அரசியல் சுயலாபத்திற்காகவே பயன்படுத்துகின்றார் என்பதே உண்மை. இந்த உண்மையை மக்கள் அனைவரும் உணர வேண்டும்.

இவர் அரசியலுக்கு வரும்போது இவருக்கு தமிழ் பேச தெரியாது. இப்போது அவர் தமிழ் பேசுகின்ற போதிலும் இவர் தென்னிலங்கையில் அதிகமாக உறவில் இருந்தமையால் சரளமாக பேசத் தெரியாத நிலையிலேயே அரசியலுக்கு வந்தார். இவர் எமது போராட்டத்தை பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர். எமது போராட்டம் தவறானது என்று கூறுவதெனில் சரியானதை சுட்டிக்காட்ட வேண்டும்.

எமது போராட்டம் இடம்பெற்றபோது ஒரே ஒருமுறை மாத்திரமே எமது போராட்ட பந்தலுக்கு இவர் வருகை தந்திருந்தார். பின்னர் ஒருபோதும் இவர் வருகை தந்திருக்கவில்லை. இவ்வாறான நிலையில் எம்மை குற்றம் சாட்டி புதிதாக அமைப்புக்களை உருவாக்குவது இவரது சுயநல அரசியலையே வெளிக்காட்டுகின்றது. இவர் சுயமாகவே ஒருவரை ஒருவர் குறை கூறுபவராக இருக்கின்றார். ஆரம்பத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை குறை கூறிக்கொண்டு இருந்தவர் இன்று விக்னேஸ்வரனை குறை கூறுகின்றார். இவர் வாழ்வு குறை கூறுவதாகவே காணப்படுகின்றது.

நாம் ஓஎம்பி அலுவலகத்தை எப்போதும் ஆதரித்தது கிடையாது. சர்வதேசம் குறித்த அலுவலகத்தை நம்பும் வகையில் ஒத்துழைக்குமாறு கூறியது. குறித்த அலுவலகத்தால் எதையும் செய்ய முடியாது என்பதை சர்வதேசத்திற்கு எடுத்து கூறுவதற்காக நாம் சில முக்கிய சாட்சிகளுடன் கூடிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது விடயத்தை கண்டுபிடித்து தருமாறும் மூன்று மாதம் கால அவகாசம் கொடுத்தோம். அது இன்றுவரை இடம்பெறவில்லை.

இந்த நிலையில் சர்வதேசத்திடம் குறித்த உண்மையை வெளிப்படுத்த உள்ளோம். இவர்களால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு எந்தவொரு விடயத்தையும், நீதியையும் பெற்றுக்கொடுக்க முடியும் என்ற உண்மையை கொண்டு செல்ல உள்ளோம்.

இவ்வாறான சூழலில் தமது சுயலாபத்திற்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியினர் செயற்படுகின்றனர். குறித்த செயற்பாடுகளுக்கும் தமக்கும் தொடர்பு இல்லை என அவர்கள் தெரிவிக்கின்றபோதிலும், எம்மிடம் அவற்றுக்கான ஆதாரம் உள்ளது.

கிழக்கில் இடம்பெற்ற போராட்டம் ஒன்றில் புதிதாக உருவாக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அமைப்பொன்றின் இரு வேறு மாவட்ட தலைவிகளுக்கு மத்தியில் செ.கஜேந்திரன் அவர்கள் நின்ற புகைப்படங்கள் உள்ளன.

இவ்வாறு பல உண்மைகள் எம்மிடம் உள்ளது. எனவே மக்கள் இவர்களை அடையாளம் கண்டு, இவர்கள் தமது சுய இலாப அரசியலுக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு பதில் கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி,

எமது போராட்டம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் கட்சி சார்ந்து செயற்படவில்லை. ஆனால் கஜேந்திரகுமார் அணியினர் அவ்வாறு ஒரு அணியை உருவாக்குகின்றனர். உண்மையில் இவ்விடயம் கவலையை அளிக்கின்றது.

எமது போராட்டத்தை மழுங்கடிக்க இவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர். கடந்த பிரதேச சபை தேர்தலில் இவ்வாறு ஒரு அமைப்பினை உருவாக்கி அதிலிருந்து சிலரை தேர்தலில் நிறுத்தி தோல்வியை சந்தித்தனர். போராட்டம் ஒன்றினை 10 அடி பந்தல் ஒன்றினை அமைத்து இவர்கள் ஆரம்பித்து வைத்தனர். நாமும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக அங்கு சென்று வழிநடத்தினோம். காலப்போக்கில் குறித்த போராட்டத்தை மேற்கொண்டவர்களை தேர்தலில் நிறுத்தினர். படு தோல்வியை சந்தித்தனர். அதன் பின்னர் குறித்த போராட்ட பந்தலும் அகற்றப்பட்டது.

இவ்வாறு அவர்களின் செயற்பாடுகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை வைத்து நடாத்தப்படுகின்றது. இம்முறையும் இவர்கள் தேர்தலை இலக்காக கொண்டு, சிலரை தேர்தலில் களம் இறக்குவதற்காகவே இவ்வாறு செயற்படுகின்றனர். இந்த உண்மையை புலம்பெயர்ந்துள்ள மக்களும், இங்குள்ள மக்களும் உணர வேண்டும் என மேலும் தெரிவித்திருந்தார்.

இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்