முசலியில் அதிகரித்துள்ள மணல் மாபியாக்கள்! நானாட்டான் பிரதேச சபையின் தலைவருக்கு கொலை அச்சுறுத்தல்!

36shares

மன்னார்-நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அருவியாற்றில் மணல் அகழ்வு செய்வதற்கு தனியாருக்கு முசலிப் பிரதேச செயலகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக குறித்த அனுமதியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடமானது மணல் அகழ்விற்கு உகந்ததா? என்று அவ்விடத்தில் உள்ள சாதக பாதக நிலைகளை கனிய வளப்பிரிவினருடன் பார்வையிடச் சென்ற போது அப்பகுதியில் மணல் அகழ்விற்கு விண்ணப்பித்திருந்த சிலர் நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அச்சுறுத்தலுக்குள்ளான நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி நேற்று வியாழக்கிழமை மாலை முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி தெரிவிக்கையில்,

நானாட்டான் பிரதேசத்தையும் முசலி பிரதேசத்தையும் ஊடறுத்து ஓடும் அருவி ஆறானது இரண்டு பிரதேச மக்களுக்கும் பொதுவானதாக காணப்படுகின்றது.

குறித்த அருவி ஆற்றை நானாட்டான் அல்லது முசலி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு சொந்தம் என்று எல்லையிடப்படவில்லை.

அருவியாற்றில் சட்ட விரோதமாகவும் , அனுமதியுடனும் அளவு கணக்கில்லாமல் மணல் அகழ்வு செய்யப்படும் போது அது இரண்டு பிரதேச மக்களையும் பாதிக்கிறது.

அத்துடன் தவிசாளர் என்ற வகையில் நானாட்டான் பிரதேச எல்லைக் கிராமங்களை பாதுகாப்பது எனது கடமை.

முசலிப் பிரதேச செயலகத்தால் மணல் அகழ்விற்கு அடையாளமிடப்பட்டுள்ள பகுதியானது நானாட்டான் பிரதேச சபை மற்றும் செயலகத்திற்கு சொந்தமான எல்லைக் கிராமங்களாக உள்ளது.

இந்த மணல் அகழ்வினால் அப்பகுதி மக்கள் அங்கு குடியிருக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு மன்னார் கனிய வளப் பிரிவினருடன் அப்பகுதியின் சாதக பாதக நிலைமையை பார்வையிடச் சென்ற போது அங்கு மணல் அனுமதிக்கு விண்ணப்பித்த சிலர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன் குறித்த ஆற்றுப் பகுதியானது முசலி பிரதேசத்திற்கு சொந்தமானது இதில் தலையிட எனக்கு உரிமை இல்லை என்றும் உடனடியாக இங்கிருந்து வெளியேறுமாறும் அச்சுத்தியதோடு தர்க்கத்தில் ஈடுபட்டார்கள்.

இதன் மூலம் கலவரங்களை உண்டாக்குவதற்கு ஒரு தரப்பினர் எத்தனித்தார்களா? என்னும் சந்தேகம் எழுந்துள்ளது.

அருவியாறு என்பது மன்னார் மாவட்டத்தின் சொத்து. அது அனைவருக்கும் பொதுவானது. அருவியாறு முசலிக்கு சொந்தமானது என்று என்னை அச்சுறுத்தி வெளியேற்றும் உரிமையை குறித்த சகோதர மதத்தினருக்கு யார் கொடுத்தது?

இச்செயல் காலப் போக்கில் பாரிய இன முறுகலை ஏற்படுத்தக் கூடும் என்பதற்காகவே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன் என நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

அச்சுறுத்தும் புரவி புயல் - சற்று முன்னர் வெளியான தகவல்

அச்சுறுத்தும் புரவி புயல் - சற்று முன்னர் வெளியான தகவல்

வல்வெட்டித்துறையில் நிகழ்ந்த அனர்த்தம் -40 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடப்பெயர்வு

வல்வெட்டித்துறையில் நிகழ்ந்த அனர்த்தம் -40 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடப்பெயர்வு