யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

232shares

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் யாழில் விபத்துச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

டெங்கு பாதிப்பு மற்றும் விபத்துக்களால் ஏற்படும் தாக்கம் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பல்வேறு விழிப்புணர்வு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

டெங்கு நோயின் தாக்கம் காரணமாக இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சிகிச்சைகள் உரிய முறையில் வழங்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் நாங்கள் பொதுமக்களிடம் வேண்டிக் கொள்வது, வீட்டு சுற்றாடலை சுத்தமாக வைத்திருங்கள். டெங்கு நுளம்பு பரவக்கூடிய வகையில் உள்ள ஏதுவான காரணிகளை அழித்து துப்பரவாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு பரவலை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும் விபத்துக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

அண்மையில் இடம்பெறும் விபத்துக்களுக்கான காரணம் ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் அமைதியாக இருந்தவர்கள் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்துவது இதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இதற்கு இன்னொரு காரணம் அவர்களுடைய மன அழுத்தமே. அதேபோல் தங்களுக்கு தேவையான பொருட்களை வேகமாக சென்று வாங்கி விட்டு மீண்டும் வீடு திரும்ப வேண்டும் என்ற அவாவில் விபத்தினை சம்பாதிக்கின்றனர்.

குறித்த நேரத்தில் விரைவாக செல்ல வேண்டும் என்ற மனப்பாங்கும் பலரிடம் காணப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் 10 கிலோமீட்டர் தூரத்தினை கடப்பதற்கு அவர்களுக்கு ஐந்து நிமிடம் போதும், இதுவே தற்போது இளைஞர்களின் மனநிலையாக உள்ளது.

ஆகவே நான் இளைஞர்களிடம் கேட்டுகொள்வது வேகமாக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களை செலுத்துவதனை தவிர்த்துக் கொள்ளுங்கள், இதனால் தேவையற்ற உயிரிழப்புக்கள் ஏற்படுவதுடன் விபரீதமான விபத்துகளையும் சம்பாதித்து சத்திரசிகிச்சைக்கு உட்படக்கூடிய நிலையும் காணப்படுகின்றது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் பலர் விபத்தில் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு தேவை. தற்போது பாவனையிலுள்ள மோட்டார் சைக்கிள்கள் அதிக வலு உடையவை. அதற்குரிய பாகங்கள் பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்த உதிரிப்பாகங்கள் தட்டுப்படும் பொழுது விபத்துக்கள் சம்பவிக்கின்றன. இதனால் பாரிய உடல் காயங்களுக்கு உள்ளாகின்றனர். இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களை பாவிப்பதை குறைப்பது நல்லது.

இளம் வயதினர் அதாவது 18 தொடக்கம் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இவ்வாறான மோட்டார் சைக்கிள்களை வாங்கிக் கொடுக்கும் பெற்றோர், பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் அதிகம் கரிசனை கொள்ள வேண்டும்.

உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் ஆசையாக வாங்கிக் கொடுக்கும் பொருட்கள் அது உங்களுக்கே விபரீதத்தினை ஏற்படுத்தி தேவையற்ற செலவுகளை ஏற்படுத்துகின்றன.

குறிப்பாக விபத்தில் காயமடையும்பொழுது மருத்துவச்செலவு தேவையற்ற உயிரிழப்பு என்பன இடம்பெறுகின்றது.

ஆகவே நான் பெற்றோர்களிடம் வேண்டிக் கொள்வது பிள்ளைகளுக்கு இவ்வாறான மோட்டார் சைக்கிள்கள் வாகனங்களை வாங்கி கொடுப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள். கடமை புரிபவர்கள் மட்டும் சிறந்த முறையில் மோட்டார் சைக்கிளை செலுத்தவேண்டும்.

அதேபோல்தான் இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகின்றேன், மதுபோதையில் வாகனம் செலுத்துவதை அனைவரும் தவிர்த்துக்கொள்ளுங்கள். மதுபோதையில் வாகனம் செலுத்துவதாலேயே அண்மைய நாட்களிலே அதிகளவான விபத்துக்கள் இடம் பெறுவதையும் புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

அதேபோல் தலைக்கவசம் அணியாமல் உள்வீதிகளுக்குள் மோட்டார் சைக்கிளை செலுத்தும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.

பொலிஸாரை கண்டவுடன் விரைவாக செல்வது, இதன் மூலமே விபத்துக்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!