அரச படைகளின் துணையுடன் அத்துமீறல்களில் பிக்குகள்!

132shares

ஸ்ரீலங்கா அரச தலைவரின் கிழக்கு தொல்பொருட்கள் செயலணியை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச படைகளின் துணையுடன் பௌத்த பிக்குகளால் அத்துமீறல்கள் இடம்பெற ஆரம்பித்துள்ளன.

நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தமிழர்களின் பாரம்பரிய வரலாற்று தடயங்களைக் கொண்ட குசனார் மலைக்கு பௌத்த துறவிகள் சிலர் சென்ற காரணத்தினால் அங்கு முறுகல் நிலையேற்பட்டது.

இராணுவ மற்றும் பொலிஸாரின் பிரசன்னத்துடன் வருகைதந்த பிக்குகள் அங்கு மலையினை பார்வையிட்டதுடன் அப்பகுதி தமக்கு சொந்தமான பகுதியென்றும் தெரிவித்து சென்றிருக்கின்றனர்.

இதேவேளை இன்று மட்டக்களப்பு வெல்லாவெளி, வேற்றுச்சேனை பகுதிக்கு பௌத்த பிக்கு ஒருவர், பெருமளவான படையினருடன் சென்று, அங்குள்ள காணியொன்றை பார்வையிட்டதுடன், குறித்த காணி, தங்களுக்கு உரித்துடையது என அப்பிரதேச மக்களிடம் தெரிவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வேற்றுச்சேனையில் ஒதுக்குப்புறமாகவுள்ள பகுதியொன்றினையே பௌத்த பிக்கு, இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புடன் நேற்று பார்வையிட்டதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பகுதியில், ஒரு மாதத்திற்கு முன்பாக அப்பகுதி இளைஞர்கள் விளையாட்டு மைதானம் ஒன்றை அமைக்க முற்பட்டிருந்த வேளையில் அங்குவந்த வெல்லாவெளி பொலிஸார், அவற்றினை தடுத்தி நிறுத்தியதுடன் இது அரச பகுதி என்பதனால் எந்ததொரு நடவடிக்கையையும் முன்னெடுக்க வேண்டாமென கூறிச்சென்றனர் எனவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் பிக்கு, பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் சென்று நிலத்தை பார்வையிட்டு சென்றுள்ளமை தொடர்பாக மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

வேற்றுச்சேனைக்கு அருகில், மண்டூர் கந்தசுவாமி ஆலயம் காணப்படும் நிலையில், பௌத்த தேரர்களின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து தமிழ் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் கிழக்கு தொல்பொருட்கள் செயலணி ஒன்று அமைக்கப்பட்டதை தொடர்ந்தே மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறன அத்துமீறல்கள் இடம்பெற்று வருகின்றன எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்