முடிந்தால் நிரூபித்துக் காட்டுங்கள்! சரவணபவன் விடுத்துள்ள சவால்

120shares

தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதான குற்றச்சாட்டுகளை முடிந்தால் நிரூபித்துக் காட்டுமாறு நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான ஈ.சரவணபவன் சவால் விடுத்துள்ளார்.

மட்டுவில் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

ராஜபக்ஷகர்களுடன் கடந்த காலங்களில் ‘டீல்’ பேசியவர்களையும், பின் கதவால் ஒப்பந்தம் செய்தவர்களையும் தன்னுடன் கூட வைத்துக்கொண்டு, அவர்களை வேட்பாளர்களாகவும் களமிறக்கி விட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இடையே ஒப்பந்தம் இருப்பதாக வாய்கூசாமல் பொய் சொல்கின்றார் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன்.

ராஜபக்ஷகர்களுடன் கூட்டமைப்பு எந்த உறவுமில்லை என்பதைத் துணிந்து சொல்வதுடன், குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் முன்னாள் நீதியரசர் மக்கள் என்ற நீதிபதிகள் முன்பாக முடிந்தால் ஆதாரங்களை முன்வைக்கட்டும் என்று சவால் விடுகின்றேன்.

ஆனால், ராஜபக்ஷகர்களுடன் அவருக்கும் அவருடன் இருப்பவர்களுக்கும் ‘டீல்’ இருக்கின்றது என்பதை என்னால் ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும்.

முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களைத் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றார்.

அவரது குற்றச்சாட்டுக்கள் மக்கள் மத்தியில் தாக்கம் செலுத்தவில்லை. ஆனாலும் அவரோ சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போன்று ஏதாவது பொய்யையும் புரட்டையும் சொல்லி எப்பாடுபட்டாவது இந்தத் தேர்தலில் வெற்றி பெறத் துடிக்கின்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதான ஆதரவுத் தளத்தை சிதைப்பதற்காக அவர் கடைசியாக எடுத்துள்ள ஆயுதம்தான் பொதுஜன முன்னணியுடன் கூட்டமைப்புக்கு இரகசிய ஒப்பந்தம் இருக்கின்றது என்ற கருத்துரை.

அவரது மனச்சாட்சிக்கே தெரியும். தான் சொல்வது பச்சைப் பொய் என்று. இருப்பினும் அரசியல் ஆதாயத்துக்காக அதனை அவிழ்த்து விடுகின்றார்.

விக்னேஸ்வரனின் அணியில் இருந்து கொண்டு இந்தத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தான் ராஜபக்ஷர்களுடன் ‘டீல்’ வைத்திருக்கின்றார்கள். அதனைத் திசை திருப்ப இந்தப் பழியை கூட்டமைப்பு மீது போட்டாரோ நான் அறியேன்.

மஹிந்த ராஜபக்ஷ அமைச்சராக இருந்த காலத்தில் அவரது தனிப்பட்ட செயலராக இருந்தவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். விக்னேஸ்வரனுக்கு இது தெரியுமோ தெரியவில்லை.

2010ஆம் ஆண்டு போர் முடிந்த கையோடு ஜனாதிபதி தேர்தல் நடந்தது. ஒட்டுமொத்த தமிழினமும் மஹிந்தவுக்கு எதிராகச் சீற்றமுடன் எழுந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் தமிழர்களின் கையாலேயே அவர்களின் கண்ணைக் குத்த வைக்க ராஜபக்ஷர்கள் பாடுபட்டனர்.

ராஜபக்ஷர்களுடன் ‘டீல்’ பேசிக் கொண்டு பணத்தையும் பெற்றுக்கொண்டு அந்தத் தேர்தலில் தமிழர் வாக்குகளைப் பிரிக்கக் களமிறங்கியவர் யார்?

அவர் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட்டார். அவர் யார் என்று நான் சொல்லியா நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. தமிழரின் ஒற்றுமைக்கான கோசம் பெரும் எடுப்பில் ஒலித்தது. ஆனாலும் அந்த ஒற்றுமையைக் குலைக்க விரும்பிய ராஜபக்ஷர்கள் தமிழர் தாயகத்தில் பணம் கொடுத்து சுயேச்சைக் குழுக்களை டசின் கணக்கில் களமிறக்கினர்.

அந்தத் தேர்தலில் கூட்டமைப்பின் வாக்கு வங்கியைச் சிதைத்த சிறீகாந்தாவும், சிவாஜிலிங்கமும் தனித்துப் போட்டியிட்டனர். அவர்கள் யாருடைய தேவையை நிறைவேற்ற, யாருடன் ‘டீல்’ பேசிக் களமிறங்கினர் என்பது தெரியாதா?

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட்ட போது கூட்டமைப்பு அவரைப் பகிரங்கமாக எதிர்த்தது. அவரைத் தோற்கடிக்குமாறு தமிழ் மக்களுக்கு அறைகூவல் விடுத்தது. தமிழ் மக்களை கோட்டாவுக்கு எதிராக வாக்களிக்கத் தூண்டியது.

3 இலட்சத்து 20 ஆயிரம் மக்கள் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்குத் தலைசாய்த்து வாக்களித்தார்கள். ஆனால், நீதியரசரே நீங்கள் என்ன செய்தீர்கள்? கோட்டாபயவுக்கு எதிராக வாக்களிக்கச் சொன்னீர்களா? இல்லைத்தானே. அப்படியானால் இப்போது சொல்லுங்கள், ராஜபக்ஷர்களுடன் இரகசிய ‘டீல்’ பேசியது கூட்டமைப்பா? விக்னேஸ்வரன் அணியா? என அவர் சவால் விடுத்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
முதன்முறையாக விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு இரகசிய ஆவணத்தை அனுப்பிய கோட்டாபய அரசு

முதன்முறையாக விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு இரகசிய ஆவணத்தை அனுப்பிய கோட்டாபய அரசு

விடுதலைப்புலிகளின்நிலப்பகுதியில் சிக்கிய அநுருத்த ரத்வத்த குழுவினரை காப்பாற்றியவருக்கு கிடைக்கவுள்ள உயர் பதவி

விடுதலைப்புலிகளின்நிலப்பகுதியில் சிக்கிய அநுருத்த ரத்வத்த குழுவினரை காப்பாற்றியவருக்கு கிடைக்கவுள்ள உயர் பதவி

இலங்கைக்கு நிபந்தனை விதித்ததா இந்தியா? சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தகவல்

இலங்கைக்கு நிபந்தனை விதித்ததா இந்தியா? சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தகவல்