வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போததைய நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் மீது வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுத்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று முடிவுக்கு வந்துள்ளது.
குறித்த வழக்கு நண்பகல் 1.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒரு மணி நேரத்துக்குள்ளேயே சமரசமாகத் தீர்த்துவைக்கப்பட்டதால் வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
விக்னேஸ்வரன் மீதான வழக்கை வாபஸ் பெறுவதற்காக டெனீஸ்வரன் தரப்பில் நேற்று முன்வைத்த நிபந்தனைகளில் இரண்டை வாபஸ் பெறுதாக டெனீஸ்வரன் தரப்பு இன்று விசாரணை ஆரம்பமான போது நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியது.
உச்ச நீதிமன்றத்தில் டெனீஸ்வரன் மீது தொடுத்திருந்த வழக்கை விக்னேஸ்வரன் வாபஸ் பெற்றால் போதுமானது என டெனீஸ்வரன் தரப்பு தெரிவித்ததை விக்னேஸ்வரன் தரப்பு ஏற்றுக்கொண்டதையடுத்து இந்த வழக்கு சமரசமாகத் தீர்த்துவைப்பதற்கான சூழ்நிலை உருவானது.
இதனையடுத்து நீதியரசர்கள் இருவரும் இது தொடர்பாக ஆலோசனை நடத்திய பின்னர் வழக்கு விசாரணை முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.