பகல்கனவு காணும் கோட்டாபய அரசு - ஒருநாளும் நிறைவேறாது! சரத் பொன்சேகா சூளுரை

386shares

பெரும்பான்மை பலத்தைக் கொண்டு எதனையும் சாதித்துவிடலாம் என்று கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் பகல் கனவு கண்டுவருவதாகவும், அது ஒருநாளும் நிறைவேறாது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மூன்றிலிரண்டு பெரும்பான்மையை வைத்துக் கொண்டே மஹிந்த அரசாங்கம் 18ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவந்து இறுதியில் ஆட்சியே பறிபோனதை தற்போதைய அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.

எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 20ஆவது திருத்தச் சட்ட யோசனைக்கெதிராக களனி ரஜமகா விகாரையில் நேற்றைய தினம் விசேட பூஜைகளையும் வழிபாடுகளையும் நடத்தியது.

இதில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட கட்சியின் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த வழிபாடுகளின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,

20ஆவது அரசியலமைப்புத் திருத்த யோசனையின் ஊடாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுவிடும்.

நீண்டகாலத்திற்கு அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்கின்ற அவருடைய கனவும் கலைந்துவிடும்.

எதிர்கட்சிகளாகிய நாங்கள் இந்த 20ஆவது திருத்தத்தை தோற்கடித்தால் தான் பிரதமர் மஹிந்தவின் கனவு நனவாகும்.

அதேபோல 18ஆவது திருத்தச் சட்டத்தையும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடனேயே அப்போதைய அரசாங்கம் கொண்டுவந்திருந்தது. இருந்த போதிலும் இறுதியில் அரசாங்கமே அள்ளுண்டுபோனது.

18ஆவது திருத்தத்தின் ஊடாக நாட்டிற்கும், ஊடகம், தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்டவைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு 19ஆவது திருத்தச் சட்டத்தினூடாக தடுத்து நிறுத்தப்பட்டது. ஆகவே அதனை நீக்குவதற்கு மக்கள் இணங்கமாட்டார்கள்.

ரணில் மற்றும் மைத்திரி கூறிய விடயங்கள் இன்று குப்பைத் தொட்டியில் போடப்பட்டுவிட்டது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையை வழங்கியமைக்காக நாட்டையே ஏப்பமிடுவதற்கு இடமளிக்கமுடியாது.

இன்று நாட்டு மக்களுக்கு பாரிய பிரச்சினைகள் உள்ளன. இதனை நிவர்த்தி செய்யாது அரச தரப்பு தங்களுடைய அதிகாரங்களை மாத்திரம் அதிகரிக்கவும், அவர்களுடைய பங்காளிகளை பலப்படுத்தவுமே முயற்சி செய்துவருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால  ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய