தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு முகநூலில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்ததாக கூறி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஏறாவூர் பொலிசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
இன்றைய தினம் முகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் புலிகளின் பாடல்கள்,சின்னங்களை பதிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பலரை பொலிசார் தேடித் தேடி கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 19 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நான்கு பேரை ஏறாவூர் பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேலும் 55 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை தேடி வருவதாகவும் அவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களில் அதிகமானோர் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தீவிர ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.