வடக்கு மக்களுக்கு பகிர்வை விட அபிவிருத்தியே தேவைப்படுகிறது. இந்தச் செய்தியை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில கூறினார்.
“வடபகுதி மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் பிரிவினைவாத எண்ணங்களில் இருந்து மாறி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என தமிழ் ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கு பதிலளித்த அவர்,
.“வடபகுதி மக்கள் கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றிருந்ததை காண முடிந்தது.
அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீ லங்கா பொது பெரமுன, ஈ.பி.டி.பி மற்றும் ரி.எம்.வி.பி ஆகிய அரசாங்க கூட்டணி பங்காளிக் கட்சிகளுக்கே ஆதரவு வழங்கியிருந்தனர்.
எனவே வடக்கு மற்றும் கிழக்கு வாக்காளர்கள் விடுத்துள்ள செய்தியை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தச் செய்தி என்னவென்றால் அவர்களுக்கு பகிர்வை விட அபிவிருத்தியே தேவைப்படுகிறது.
அவர்களது இந்தச் செய்தியை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடன் கைகோர்த்து அவர்களின் பிரதேசத்தை அபிவிருத்தி செய்து கொடுக்க வேண்டும்.
இந்த அரசியல் மாற்றத்துக்கு தமிழ் அரசியல் கட்சிகளின் உட்பூசல்களே காரணம். கட்சி உட்பூசல் காரணமாக மக்களின் குறைகளைத் தீர்ப்பதில் அவர்கள் போதிய அக்கறை காட்டவில்லை.
இதன் காரணமாக கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களின் பெறுபேறுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகள் குறைந்திருந்தன.” என்றார்.