தமிழக மீனவர்கள் இலக்கு வைக்கப்படுவதன் பின்னணி என்ன? யாழ்.பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கை

0shares

தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே தமிழக மீனவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உயிரிழந்த இந்திய மீனவர்களுக்கு இன்று முற்பகல் 10.15 மணியளவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அஞ்சலி நிகழ்வின் இறுதியில் கண்டன அறிக்கை ஒன்றும் மாணவர்களால் வாசிக்கப்பட்டு ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சமீபத்தில் இலங்கைதீவினை அண்டிய கடற்பரப்பில் தமிழக மீனவர்களது படகொன்று மூழ்கடிக்கப்பட்டிருந்ததோடு, அதில் இருந்த நான்கு மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் எம்மை பெருங்கவலையில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவத்தில் தமது உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கடந்த காலங்களிலும் சரி இவ்வாறு தமிழக மீனவர்கள் இலங்கைதீவினை அண்டிய கடற்பரப்பில் இனவெறியர்களால் படுகொலை செய்யப்படுகின்றமையானது அவர்கள் 'தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே இலக்கு வைக்கப்படுகின்றார்கள்' என்பதனை வெளிக்காட்டுகின்றது.

இயற்கையின் சீற்றங்களுக்கும், சவால்களுக்கு முகங்கொடுத்தவாறு கடலில் தமது தொழில்களை மேற்கொள்ளும் மீனவர்கள், எல்லை தாண்டுகின்ற சம்பவங்கள் பல்வேறு கடல்பிராந்தியங்களிலும் நடைபெறுகின்றன.

குறிப்பாக இலங்கைத்தீவினை அண்டிய கடற்பரப்பில் எல்லைதாண்டும் மீனவர்களிடத்தில், தமிழ்நாட்டு மீனவர்கள் மட்டும் கடற்படையினரால் இலக்கு வைக்கப்படுகின்ற சம்பவம் இதனை நமக்கு உணர்த்துகின்றது.

குறிப்பாக இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் மாண்புமிகு திரு. ஜெய்சங்கர் அவர்கள் வந்து சென்ற சில நாட்களிலேயே நடந்தேறிய இச்சம்பவம், இந்தியா மீதான சிறிலங்கா அரசின் வெறுப்புணர்வை வெளிப்படுத்துவதாக கருத வேண்டியுள்ளது.

இந்நிலையில் கடற்படையினரது இந்த அத்துமீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைக்குழுவினை இந்திய மத்திய அரசு உருவாக்க வேண்டுமெனக் கோருகின்றோம்.

இதேவேளை, முகங்களை துணிகளால் மூடியவாறு எல்லைதாண்டும் இந்திய மீனவர்கள் நமது தாயக மீனவர்களது வலைகளை அறுக்கின்ற சம்பவங்களும், அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்பிலும் எழுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தமிழ்நாட்டு அரசு கூரிய கவனம் செலுத்த வேண்டுவதோடு, தமிழ்நாட்டு மீனவர்களுக்கும், தமிழர் தாயக மீனவர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வினை மேன்மைப்படுத்தும் வகையில் வலுவானதொரு உறவுப்பாலமொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என நாம் எதிர்பார்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு