இலங்கையில் சிறுபான்மையினரை குறிவைத்து மேற்கொள்ளப்படும் மனிதவுரிமை மீறல்கள்! ஐநாவிற்கு முஸ்லிம்கள் எழுதியுள்ள கடிதம்

0shares

கொரோனா தொற்றுநோயால் உயிரிழக்கும் அனைவரின் உடல்களும் எரிக்கப்படுகின்றமை சிறுபான்மையினரை குறிவைத்து மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல் என ஐக்கிய நாடுகள் சபை கடுமையாக கண்டித்துள்ள நிலையில், இலங்கை அரசாங்கத்தின் கொள்கையை மாற்றிக்கொள்ள வலியுறுத்த வேண்டுமென, முஸ்லிம்கள் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பு தும்முல்லை சந்தியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் நேற்றைய தினம் ஒப்படைத்த கடிதத்தில், முஸ்லிம் இடதுசாரி முன்னணி இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

கொரோனாவால் உயிரிழக்கும் மக்களின் உடல்களை அடக்கம் செய்ய உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி அளித்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கம் அதனைத் தடுப்பதாக, இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கரிடம், கையளித்த கடிதத்தில், முஸ்லீம் இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.ஆர்.எம் பைசல் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்காக இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் இஸ்லாமிய மரணத்தின் நான்கு கட்டாயக் கொள்கைகளில் மூன்றைக் கைவிட்டுள்ளதாகவும், தாம் பின்பற்றக்கூடிய ஒரே உரிமையை அரசாங்கம் பறிப்பதாகவும் முஸ்லிம் இடதுசாரி முன்னணி தெரிவித்துள்ளது.

"முஸ்லிம்கள் உடலைக் கழுவுதல், துணியால் உடலை சுற்றுதல் மற்றும் ஒன்றாக பிரார்த்தித்தல் ஆகிய விடயங்களை கைவிட ஒப்புக் கொண்டுள்ளனர். அனைத்து அரசாங்க சுகாதார பரிந்துரைகளுக்கும் உட்பட்டு, பாதுகாப்பான அடக்கம் செய்வதற்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க உடலை அடக்கம் செய்ய அரசாங்கத்தின் அனுமதியை மாத்திரமே அவர்கள் கேட்கிறார்கள், ”என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

முஸ்லீம் இடதுசார் முன்னணி ஐ.நா அலுவலகத்திற்கு முன்னால் ”உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு மதிப்பளியுங்கள், பலவந்தமாக எரிப்பதை நிறுத்துங்கள்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அமைதிப் போராட்டத்திலும் ஈடுபட்டது.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக எரியூட்டும் இலங்கை அரசின் கொள்கை மனித உரிமைகளை மீறும் செயலாகும் என, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை எச்சரித்திருந்து.

ஒரு இனம் சார்ந்த கொள்கை நிலைப்பாடாக அது அமைந்துள்ளமை ஏற்புடையதல்ல என மனித உரிமைகள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேவேளை, கொரோனா வைரஸால் உயிரிழந்த முஸ்லிம்களை கட்டாயமாக தகனம் செய்வதை எதிர்த்து 2020 டிசம்பர் 31 புதன்கிழமை பொரளை கனத்தை மயானத்திற்கு முன்னால் முஸ்லிம் இடதுசாரி முன்னணி போராட்டம் ஒன்றையும் நடத்தியிருந்தது.

இந்த வருட ஆரம்பத்தில், சடலங்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்தவும், முஸ்லிம் சமூகத்திற்கு மகிழ்ச்சியைத் தரும் வகையில் செயற்படவும் அந்தக் கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

அவ்வாறு செய்யாவிடின், முஸ்லிம் மக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க புத்தாண்டில் தினமும் போராட வேண்டியிருக்கும் என முஸ்லிம் இடதுசாரி முன்னணி அரசாங்கத்தை எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை