சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகளை மூன்றாம் தரப்பினர் பொறுப்பேற்க ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சுங்க தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் ஒரு கூட்டத்தில் உரையாற்றும் போது, சுங்கத் திணைக்களத்தின் நடவடிக்கைகளை மேற்கொள்ள திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களையும் பதவி நீக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
தற்போது ஊழல் அதிகாரிகளால் சுங்கத் திணைக்களம் நிரம்பியுள்ளது என்று கூறிய ஜனாதிபதி அதற்கு தீர்வாக இந்த ஆலோசனையை வழங்கியிருந்தார்.
எனினும் ஜனாதிபதியின் இந்த கரத்தை கண்டித்த சுங்க தொழிற்சங்கங்கள் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், ஜனாதிபதி அனைத்து ஊழியர்களையும் ஊழல்வாதிகள் என்று பொதுமைப்படுத்துவது நியாயமற்றது.
சில வர்த்தகர்கள் நிதி மோசடிகளைச் செய்வதற்காக சில உயர் அதிகாரிகளின் ஆதரவைப்பெறுவது தொடர்பில் ஜனாதிபதி தவறான தகவலைப் பெறுகிறார்.
சுங்கத் துறைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த போதிலும், 2020 ஆம் ஆண்டிற்கான வரி வருவாய் இலக்கை 99% பூர்த்தி செய்ய முடிந்தது என்று அவர்கள் கூறினர்