சீனாவில் சிறுபான்மையின உய்குர் இன முஸ்லிம்களை நடத்தும் விதம் இனப்படுகொலை என கனடா நாடாளுமன்றத்தில் ஏகனமதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் மீது குறிப்பிடத்தக்க அளவான லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
சீனாவின் ஷின்ஜியாங் பிராந்தியத்தில் தடுப்பு முகாம்களில் சிறுபான்மையின உய்குர் இன முஸ்லிம் மக்கள் சித்திரவதை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக உய்குர் இன முஸ்லிம் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவதுடன், கருத்தடைக்கு உட்படுத்தப்படுகின்றமை தொடர்பில் பி.பி.சி செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் சீனாவில் உய்குர் இன முஸ்லிம் மக்கள் நடத்தப்படும் விதத்தை இனப்படுகொலையாக பிரகடனப்படுத்தும் தீர்மானம் கனேடிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டிருந்தது.
எதிர்கட்சியான கென்சவேட்டிவ் கட்சி கொண்டுவந்த இந்த தீர்மானம் 266 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனினும் பிரதமர் ஜெஸ்ரின் ட்ரூடோ மற்றும் ஆளும் லிபரல் கட்சி அமைச்சரவையின் பெரும்பாலான உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றகவில்லை.
எனினும் எதிர்கட்சியில் அனைத்து உறுப்பினர்களுடன் குறிப்பிடத்தக்க அளவான ஆளும் லிபரல் கட்சி உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
ஏற்கனவே உய்குர் முஸ்லீம் மக்களை சீன நடத்தும் விததத்தை இனப்படுகொலையாக பிரகடனம் செய்யும் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இரண்டாவது நாடாக தற்போது கனடாவும் அவ்வாறான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
உய்குர் இன முஸ்லீம் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாயின், 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை வேறு நாட்டிற்கு மாற்றும் தீர்மானமும் கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கனடாவின் இந்த தீர்மானத்திற்கு சீனா கண்டனம் வெளியிட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பில் தமது கடுமையான எதிர்ப்பை கனேடிய அரசாங்கத்திற்கு பதிவுசெய்துள்ளதாக சீனாவின் பேச்சாளர் வாங் வென்பின் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் உய்குர் இன முஸ்லீம் மக்களை சீனா நடத்தும் விதத்திற்கு பிரதமர் ஜெஸ்ரின் ட்ரூடோ கண்டனம் வெளியிட்ட போதிலும் அதனை இனப்படுகொலையாக அடையாளப்படுத்துவதை தவிர்த்துவருகின்றார்.
இனப்படுகொலையாக பிரகடனப்படுத்துவதற்கு முன்னர் அது தொடர்பில் ஆழமாக ஆராய வேண்டும் என பிரதமர் கூறியுள்ள போதிலும் கனடா நாடாளுமன்றத்தில் இனப்படுகொலை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏற்கனவே சீனாவின் முன்னணி தொழிற்நுட்ப நிறுவனமான ஹுவாவேயின் நிதிப் பிரிவு தலைமை நிறைவேற்று அதிகாரி மெங் வன்சோவின் கைது விடயத்தில் இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.
மெங் வன்சோவின் கைதுக்கு பதில் அளிக்கும் வகையில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் இரண்டு கனேடிய பிரஜைகளை சீனாவும் கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.