மஹிந்தவிடம் சலுகைகளை பெற்றுக்கொண்டு ஈழத்தமிழருக்கு எதிராக செயற்பட்ட பிரித்தானிய எம்.பிக்கு நேர்ந்த கெதி!

577shares

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் செலவில் 2 கோடி ரூபாவுக்கும் அதிகமாக செலவிடப்பட்ட அதி சொகுசு விடுமுறையை கழித்திருந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஏழு வார காலத்திற்கு நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள முடியாத வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வட அயர்லாந்தின் DUP என்று அழைக்கப்படும் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான இயன் பெஸ்லிக்கே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது.

பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் கன்சவேடிவ் கட்சி தலைமையிலான தற்போதைய கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு வழங்கிவரும் வட அயர்லாந்து டிமொக்ரடிக் யூனியனிஸ்ட் கட்சியின் ( Democratic Unionist Party ) நாடாளுமன்ற உறுப்பினர் இயன் பெஸ்லி 2013 ஆம் ஆண்டு சிறிலங்காவின் அப்போதைய மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் செலவில் தனது குடும்பத்துடன் இரண்டு முறை விடுமுறைக்காக சிறிலங்காவிற்கு சென்றிருந்தார்.

இந்தத் தகவலை லண்டனிலிருந்து வெளியாகும் பத்திரிகையான “தி டெலிகிராப்” பத்திரிகை 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அம்பலப்படுத்தியிருந்தது.

2013 ஆண்டு தனது குழந்தைகள் மற்றும் மனைவியுடன் அனைத்து செலவுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடுமுறைக் காலத்தை கழிக்க சிறிலங்காவுக்கு சென்றமை தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிவிக்காததாலேயே இயன் பேஸ்லிக்கு ஏழு வார காலத்திற்கு பிரித்தானிய பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள முடியாத வகையில் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.

தண்டனைக்கு ஆளாகியுள்ள பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் போர் குற்றங்கள் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் போது சிறிலங்கா அரசுக்கு சாதகமாக செயற்பட வேண்டும் என்று அப்போதைய பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் அரசுக்கு எழுத்துமூலம் அழுத்தம் கொடுத்திருந்தவர் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

டேவிட் கெமரூனுக்கு 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பேஸ்லி எழுதியிருந்த கடிதத்தில், சிறிலங்காவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றுக்கு விடுக்கப்படும் கோரிக்கைக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இயன் பெஸ்லி மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை விசாரித்த பாராளுமன்ற ஒழுக்காற்றுக் குழு, பெஸ்லியின் செயற்பாடு பணம் பெற்றுக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட அழுத்தமாக அறிவித்துள்ளதுடன், அவரது இந்த நடவடிக்கை பிரித்தானிய பாராளுமன்றத்தின் நன்மதிப்பிற்கு ஏற்படுத்திய அபகீர்த்தியான செயற்பாடாகும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தினால் பெஸ்லிக்கு வழங்கப்பட்ட உபசரிப்புக்கள் காரணமாக அவரால் முற்கொள்ளப்பட்ட அழுத்தங்கள், சிறிலங்காவுக்கு எதிரான மனித உரிமை மீறல் தொடர்பிலான செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று ஏனையவர்கள் சிந்திப்பது நியாயமானது என்றும் பிரித்தானிய பாராளுமன்றத்தின் ஒழுக்காற்றுக் குழுவின் தலைவர் கெத்தரின் ஹட்சன் தெரிவித்துள்ளார்.

கடந்த 15 வருடங்களில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்ட நீண்ட நாள் நாடாளுமன்ற தடை இதுவென்றும் பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிறிலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்துடனும் நெருங்கிய தொடர்புகளை பேணி வரும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் இயன் பெஸ்லி சிறிலங்கா அரசாங்கத்தின் செலவில் சுற்றுலாப் பயணம் சென்றதை பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்ட வேளையில், பிரித்தானியாவிலுள்ள சிறிலங்கா தூதரகம் இயன் பெஸ்லி சிறிலங்கா மற்றும் பிரித்தானியாவிற்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்த ஏற்ற நபராக கருதுவதாக அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும் இயன் பெஸ்லி தன் மீதான குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரித்துள்ளதுடன், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை தர்க்க ரீதியாகவோ, ஆதாரங்களோடோ நிரூபிக்க முடியாதவை என்று தெரிவித்துள்ளதுடன், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மேற்கொள்ளப்பட்டவை என்றும் தெரிவித்திருக்கின்றார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க