திரேசாமேயின் தலைக்குமேலே பிரெக்சிற்கத்தி! அடுத்தவாரம் எப்படிச் சமாளிப்பார்?

63shares

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகிகொள்ளும் பிரெக்சிற் வரைவை அங்கீகரிப்பது தொடர்பான விவாதங்கள் தொடர்ந்தும் பிரித்தானிய நாடாளுமன்றத்தை அதிர்வுக்குள்ளாக்கி வருகின்றது

எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று இந்தவரைவு குறித்த வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தின் மக்கள்பிரதிநிதிகள் சபையில் இடம்பெறவிருப்பதால் அந்தசபையிலும் பிரபுக்கள் அவையிலும் விவாதங்கள் தீவிரம் பெற்றுள்ளன

சர்ச்சைக்குள்ளான பிரெக்சிற் வரைவை வெஸ்ற்மினிஸ்டர் அரங்கு அங்கீகரிக்கின்றதோ இல்லையோ இந்தமுடிவுபிரித்தானியப் பிரதமர் திரேசா மேயின் அரசியல் எதிர்காலத்துக்குமிக முக்கியமானது.திரேசா மேயின் இந்த ஆட்டம் அவரது பதவிவிலகல்வரை நகர்த்தப்படக்கூடுமென்பதால் அவருக்கும் சமகால நாட்கள் முக்கியமானவை.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தலைவர்கள் பெல்ஜிய தலைநகர் பிரஸல்ஸில் கூடியபோது அவர்கள் அனைவரும் ஏறக்குறைய அரைமணிநேரத்தில் பிரெக்சிற் ஒப்பந்தம் குறித்த இதே வரைவுக்கு இணங்கியிருந்தனர். ஆனால் லண்டனில் நிலைமை அவ்வாறு இல்லை. தொடர்ந்தும் இந்த வரைவு நாடாளுமன்றத்தில் கடும் வாதப்பிரதிவாத அதிர்வுகளை ஏற்படுத்திவருகிறது.

அடுத்தாண்டு மார்ச் 29ஆம் திகதி நள்ளிரவுடன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் திட்டம் உள்ளது. ஆயினும் இப்போது ஐரோப்பிய நீதிமன்றம் வழங்கிய புதிய வியாக்கியானத்தில் இந்தவிடயத்தில் பிரித்தானியா வேண்டுமானால் தனித்து முடிவெடுத்து பிரெக்ஸிற் நகர்வை மீளெடுக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல பிரித்தானியாவில் எதிர்க்கட்சிகள் வழங்கிய அழுத்தங்கள் காரணமாக வேறுவழியின்றி பிரெக்சிற் தொடர்பாக சட்டமாஅதிபர் திணைக்களம் வழங்கிய முழு அறிக்கையை கூட திரேசாமேயின் அரசாங்கம் பகிரங்கப்டுத்தியும் விட்டது.

ஆயினும் இவ்வாறு எல்லாம் செய்தாலும் இந்த வரைவை நாடாளுமன்றம் அங்கீகரிக்ககூடிய தெளிவான அறிகுறிகள் இதுவரை திரேசாமேக்கு வழங்கப்படவில்லை. மாறாக அவரது எண்ணத்தை சிதறடிக்ககூடிய வகையில்தான் அறிகுறிகள் தெரிக்கின்றன.

இப்போது இந்தவிடயத்தில்; திரேசாமேக்கு உதவிசெய்ய முன்வந்துள்ள முக்கிய அமைச்சரவை சகாக்கள் இயலுமானவரை நாடாளுமன்ற உறுப்பினர்களை வழிக்கு கொண்டுவந்து சாதகமாக வாக்களிக்க வைக்க படாதபாடுபட்டுவருகின்றனர். வடஅயர்லாந்தின் எல்லை குறித்து இந்தவரைவில் கூறப்பட்டுள்ள விடயத்தில் அவர்கள் விளக்கங்களை வழங்கிவருகின்றனர்.

ஏற்கனவே பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவளிக்கப்போவதில்லையெனத் தெரிவித்துள்ளதால் இதற்கு எப்படியும் அங்கிகாரத்தை பெற்றுவிடும் முனைப்பில் திரேசாமே குழு கடுமையாக இயங்கிவருகிறது.

இதையும் தவறாமல் படிங்க
`