பிரியங்கவின் வழக்கின் தீர்ப்பு! பிரித்தானிய நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்!!

1196shares

புலம்பெயர் தமிழர்களை “கழுத்தை அறுக்கும்” சைகையை காண்பித்து அச்சுறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரித்தானியாவுக்கான சிறிலங்காவின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிக்கு தண்டனை முக்தி இருக்கின்றதா இல்லையா என்பது குறித்த முடிவை மார்ச் முதலாம் திகதி அறிவிப்பதாக பிரித்தானிய நீதிமன்றம் அறிவித்திருக்கின்றது.

இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நீதிமன்ற வளாகத்தில் புலம்பெயர் தமிழர்கள் கூடிநின்று பிரிகேடியருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கு விசாரணை இன்றைய தினம் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது,சிறிலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி பிரிகேடியர் பிரியங்கவின் தண்டனை முக்தி தொடர்பில் நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.

சிறிலங்கா உயர் ஸ்தானிகர் சார்பில் முன்னிலையாகிய பெரிஸ்டர் நிக்கலஸ் வேன், பிரிகேடியரின் தண்டனை முக்தி தொடர்பில் தெளிவுபடுத்தலை வழங்குவதற்கு கால அவகாசம் வழங்குமாறு நீதிமன்றிடம் கேட்டுக்கொண்டார்.

ஒரு வருடத்திற்கு முன்னதாக சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர தினம் அனுட்டிக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி நான்காம் திகதி இலண்டனிலுள்ள சிறிலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களை பார்த்து, கழுத்தை அறுக்கும் சைகையை காண்பித்து அச்சுறுத்தியதுடன், அமைதியை குழப்பியதாக பிரிகேடியர் பிரியங்க மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பல்லியகுருகே வினோத் பிரியந்த பெரேரா, கோகுல கிருஷ்ணன் நாராயணசாமி மற்றும் மயூரன் சதாநந்தன் ஆகியோரே இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கின்றனர். இதற்கு முன்னர் கடந்த ஜனவரி 21 ஆம் திகதி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்த போது, பிரியங்க பெர்னாண்டோவை கைதுசெய்யுமாறு வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் விடுத்த பிடியாணை உத்தரவு நீதிமன்றம் பின்னர் மீளப்பெற்றுக்கொண்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் தண்டனை முக்தி தொடர்பில் நீதிமன்றத்தின் கோரிக்கைக்கு அமைய பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் விளக்கமளித்ததாகவும் அதன் பேச்சாளர் ஒருவர் ஐ.பீ.சீ தமிழுக்கு உறுதிப்படுத்தியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க