கோட்டாபயவுக்கு ஆப்பு வைக்க மஹிந்தவிடமே கோரிக்கை வைத்த அமெரிக்கா?

83shares
Image

ஸ்ரீலங்காவில் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டாம் என அவரது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்த அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷப் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி, இவ்வாறு கோரிக்கை விடுத்தமைக்கான காரணம் என்ன என்றும் வினவியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையின சமூகங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்து வைத்திருப்பதாலேயே கொழும்புக்கான அமெரிக்க தூதுவர் இந்த கோரிக்கையை விடுத்திருப்பதாக கூறும் அசாத் சாலி, ராஜபக்ஸ குடும்பத்தினரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் தெரிந்திருந்தும் அவர்களுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிணைந்த எதிரணியின் பங்காளி கட்சிகளில் ஒன்றான பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, கோட்டாபய ராஜபக்சவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாக நேற்று (11.06.2018) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.

சர்வதேச நாடுகள் கோட்டாபயவிற்கு எதிர்ப்பு வெளியிடுவதால் அவரை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறக்க வேண்டாமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் அமெரிக்க தூதுவர் அத்துல் கெய்ஷப் தெரிவித்துள்ளதாக சமூக வளைத்தளங்களில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கொழும்பில் இன்று (12.06.2018) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி இதுதொடர்பாக கருத்து வெளியிட்டார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்காவுக்கான அமெரிக்க தூதவர் அத்துல் கெஷப்புக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பில் எவ்வித அரசியல் கருத்துக்களும் பேசப்படவில்லையென பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.

2015 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று வருடங்களாக ஸ்ரீலங்காவுக்கான அமெரிக்க தூதுவராக கடமையாற்றிவரும் அத்துல் கெய்ஷப் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் ஓய்வு பெறவுள்ள நிலையில் சம்பிரதாய முறைப்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசினார் என ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க
`