வல்லரசை மட்டுமன்றி உலகையே ஒருகணம் நிசப்தம் கொள்ள வைத்த உக்கிர தாக்குதல்!

88shares

அமெரிக்கா நியூயோர்க்கில் இரட்டை கோபுரம் தாக்குதல் இடம் பெற்று இன்றுடன் 18 வருடங்கள் கடந்து விட்டது. 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் அமெரிக்க நேரப்படி இன்று நினைவுகூரப்படவுள்ளது.

அமெரிக்கா நியூயோர்க்கில் அல் ஹொய்தா அமைப்பு செப்டம்பர் 11, 2001 ஆம் ஆண்டு நடத்திய தாக்குதல்கள் உலகை அதிர வைத்தது. நான்கு பயணி விமானங்களைக் கடத்திக் கொண்டு சென்று ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மிக உயரமான உலக வணிக மையத்தின் இரட்டை கோபுரங்களை இடித்து தரைமட்டமாக்கியதுடன் 3,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிர் இழக்க காரணமாயினர்.

2001ஆம் ஆண்டு இதே நாள் அமெரிக்க நேரப்படி சரியாக காலை 8.45 அளவில் நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மைய கட்டடத்தின் வடக்கு கோபுரத்தின் மீதும் வாசிங்டன் டி. சி.யில் உள்ள அமெரிக்காவின் இராணுவ அலுவலகமான பெண்டகன் மாளிகையையும் ஒரு பயணி விமானத்தை கடத்திச் சென்று மோதி பெருஞ்சேதப்படுத்தினர்.

இத்தாக்குதல்கள் மூலம் அமெரிக்காவிற்கு பத்து பில்லியன் டொலர் வரை இழப்பு ஏற்பட்டதாக அந்நாட்டு அறிக்கைகள் தெரிவித்திருந்தன. இத்தாக்குதலுக்கு அல்ஹொய்தா அமைப்பு பொறுப்பு ஏற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஜிஹாதிகள் அதிகமாக ஈர்க்கப்படுவதற்கும் இந்த தாக்குதல் சம்பவம் ஒரு தூண்டுதலை ஏற்படுத்தியிருந்தது என்றே கூறலாம்.

இந்த தாக்குதல் சம்பவமானது வல்லரசான அமெரிக்காவின் போக்கை மாத்திரமல்லாது, உலகத்தின் போக்கையே மாற்றி அமைத்த சம்பவமாக கருதப்படுகிறது. இந்த கொடூரமான தீவிரவாத செயற்பாட்டை அடுத்து உலகெங்கிலும் உள்ள பல தீவிரவாத அமைப்புகள் அமெரிக்காவால் தடை செய்யப்பட்டன.

தாக்குதலின் விளைவாக ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினரின் போர் நடவடிக்கைகள் உக்கிரமடைந்தன.

அதேவேளை, பாலி தீவு முதல் பிரஸல்ஸ் வரை தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு இந்த தாக்குதலும் தீவிரவாதிகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது

அதனைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் போர் மற்றும் தீவிரவாத தாக்குதல்களில் பல இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அறிக்கையையும் சர்வதேச அமைப்புக்கள் வெளியிட்டன.

இந்தநிலையில், இரட்டை கோபுரம் தாக்கப்பட்டு பல வருடங்கள் கழித்த பின்னரும் சில இறுவெட்டுக்களை பழைமையான பொருட்கள் சேகரிக்கும் ஒருவர் வாங்கியிருந்தார் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அவ்வாறு அவர் பெற்றுக் காண்ட இறுவட்டுக்களில் 2400 ஔிப்படங்கள் இருந்தன எனவும் தெரிவிக்கப்படுகின்றன.

அந்த இறுவட்டில் இருந்த அனைத்தும் நியூயோர்க் தாக்குதல் குறித்த ஔிப்படங்களாக இருந்தன. அந்த ஔிப்படங்கள் அனைத்தும் அடையாளம் தெரியாத ஒரு கட்டட தொழிலாளியால் பெறப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு உள்ளான உலக வர்த்தக மையத்தின் சிதிலங்களை அப்புறப்படுத்திய போது அவை பதிவு செய்யப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.

ஔிப்படங்கள் அடங்கிய இறுவெட்டுகள் அனைத்தும் மோசமான நிலையில் இருந்தாலும், ஔிப்படங்கள் அனைத்தையும் மீட்கக் கூடியதாக இருந்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இதையும் தவறாமல் படிங்க
loading...