கமலா ஹாரிஸ் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடக்கூடும் - அதில் அவர் வெற்றி பெறுவார் என்று தான் நம்புகிறேன் என அவரது தாய்வழி மாமா கோபாலன் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தனது மருமகள் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்றுள்ள நிலையில், இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்தார். குறித்த செவ்வியில் தொடர்ந்தும் பேசிய அவர்,
நான் பதவியேற்பு விழாவில் இருக்க விரும்பியிருப்பேன். ஆனால் இந்தக் கட்டத்தில் நான் அதைச் செய்ய விரும்பவில்லை.
நான் தடுப்பூசி போடப்பட்ட பின்னரே அமெரிக்காவுக்குச் செல்வேன். கமலாவுடன் மிகவும் நெருக்கமான எனது மகள் ஷரதா பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.
நாங்கள் அனைவரும் அவளைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம். கமலா தொடர்ந்தும் எங்களுக்கு பெருமை சேர்ப்பார் என்று எனக்கு தெரியும்.
அவளுடைய அம்மாவும் பெருமையாக இருந்திருப்பார். கமலாவுக்கு நான் கூறுவது ஒன்று மட்டுமே, உங்கள் அம்மா உங்களுக்கு கற்பித்ததை செய்யுங்கள் என்றார்.