சுவிட்ஸர்லாந்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி; வெடித்தது யுத்தம்,ஒரே நாளில் 84 பேர் பலி!

  • Sethu
  • September 10, 2018
89shares

ஏமன் நாட்டில் ஜனாதிபதி அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015 ஆம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி போராளிகள் தலைநகர் சனா நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள் மீது உள்நாட்டுப் படைகளும் அண்டை நாடான சவுதி அரேபியா தலைமையிலான நேச நாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

அந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடைடா மாகாணத்தில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஈரான் அரசு மறைமுகமாக ஆயுத உதவிகளை அளித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

ஹொடைடா மாகாணத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் மீட்கும் நோக்கத்தில் சவுதி அரேபியா தலைமையிலான அமீரகப் படைகள் சமீபத்தில் அங்கு முற்றுகையிட்டு உச்சகட்ட தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல்களில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 30 லட்சம் பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஏமன் அரசுக்கும் ஹவுத்தி போராளிகளுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை முயன்றது. இருதரப்பினருக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க ஐ.நா. சபை சிறப்பு பிரதிநிதியாக மார்ட்டின் கிரிஃபித்ஸ் என்பவர் நியமிக்கப்பட்டார்.

சுவிட்ஸர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனிவாவில் மார்ட்டின் கிரிஃபித்ஸ் கடந்த 3 நாட்களாக ஏமன் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஹவுத்தி போராளிகள் சில நிபந்தனைகளை விதித்தனர்.

அரசு தரப்பினர் இதற்கு சம்மதம் தெரிவிக்காததால் ஹவுத்தி போராளிகள் இந்த அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சி நேற்று தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், செங்கடலை ஒட்டியுள்ள ஹோடைடா நகரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த 24 மணிநேரமாக நடத்திய தாக்குதல்களில் 73 ஹவுத்தி போராளிகள் கொல்லப்பட்டனர். இருதரப்பு மோதல்களில் பாதுகாப்பு படையை சேர்ந்த 11 வீரர்களும் உயிரிழந்தனர்.

பல போராளிகளும் 17 ராணுவ வீரர்களும் காயம் அடைந்தனர் என ஏமன் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க