ரஷ்ய வரலாற்றில் இடம் பிடித்துள்ள வியத்தகு விடயம்!

42shares

ரஷ்ய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு பாரிய இராணுவ பயிற்சிகள், இன்று ஆரம்பமாகவுள்ளது.

இந்த இராணுவ பயிற்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 3 இலட்சத்திற்கும் அதிகமான இராணுவ வீரர்கள் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவின் கிழக்கு சைபீரியாவில் வொஸ்டொக் 2018 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பயிற்சி நடவடிக்கைகள் இன்றிலிருந்து ஒரு வாரம் வரை நடைபெறவுள்ளன.

இந்த பயிற்சியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 3 இலட்சம் இராணுவ வீரர்கள் கலந்து கொண்டுள்ளதுடன், 36 ஆயிரம் இராணுவ வாகனங்கள், 100 விமானங்கள் மற்றும் 80 போர்க்கப்பல்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், ரஷ்ய இராணுவத்தில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட இஸ்கந்தர் ஏவுகணைகள், டி-80 மற்றும் டி-90 பீரங்கிகள், எஸ்.யு.34, எஸ்.யு.35 போர் விமானங்கள் என ஏராளமான ராணுவ தளபாடங்களும் இதில் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, இந்த பயிற்சியில் கலந்து கொள்வதற்காக சீனாவிலிருந்து சுமார் 3 ஆயிரத்து 200 இராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ரஷ்ய இராணுவ மந்திரி செர்ஜி சோய்கு 36 ஆயிரம் ராணுவ வாகனங்கள், பீரங்கிகள், கவச வாகனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் பயிற்சியில் ஈடுபடுவதை கற்பனை செய்து பாருங்கள், ஒரு போர்க்களம் போன்று இருக்கும் என தெரிவித்துள்ளார்.

சிரியா மற்றும் உக்ரைனில் ரஷ்ய தலையீடுகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் தலையீடுகள் காரணமாக மேற்கத்திய நாடுகளுடன் பதற்றநிலை ஏற்பட்டுள்ள நிலையில், இந்த போர்ப்பயிற்சி மேலும் பதற்றநிலைகளை அதிகரிக்க கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ரஷ்யாவின் இந்த போர்ப்பயிற்சி நடவடிக்கைக்கு நேட்டோ அமைப்பு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க