காணாமல் போன சவுதி ஊடகவியலாளர் தொடர்பாக வெளியான புதிய தகவல்கள்!

21shares

துருக்கியிலுள்ள சவுதி அரேபியாவின் தூதரக அலுவலகத்திற்குள் சென்று பின்னர் காணாமல் போனதாக கூறப்படும் சவுதி அரேபியாவின் ஊடகவியலாளர் ஒருவர் தொடர்பில் மேலும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுதியின் அரசாட்சியை விமர்சித்து வந்தார் என்ற குற்றச்சாட்டு ஊடகவியலாளர் ஜமால் கஷோஹி மீது ஏற்கனவே சுமத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர் கடந்த 02ஆம் திகதி துருக்கியிலுள்ள சவுதி தூதரகத்திற்கு சென்றதன் பின்னர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.

தூதரகத்திற்குள் வைத்து அவர் சவுதி அதிகாரிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என முன்னர் சந்தேகம் வௌியிடப்பட்டது. எனினும் அதனை சவுதி அரேபியா மறுத்திருந்தது. இந்த நிலையில் துருக்கியின் ஊடகமொன்று திருப்பம் மிக்க நிழற்பட ஆதாரங்களை நேற்று வெளியிட்டுள்ளது.

அதன் படி துருக்கியின் ஸ்தான்புல் விமான நிலையத்திற்கு சவுதியின் புலனாய்வாளர்கள் சிலர் வந்திறங்குவதும் அவர்கள் துருக்கியிலுள்ள சவுதி தூதரகத்திற்கு வாகனத்தில் செல்வதும் பின்னர் விமான நிலையத்தினுடாக சவுதிக்கு புறப்பட்டு செல்வதையும் காட்டும் நிழற்படங்கள் சிசிடிவி புகைப்பட கருவியின் மூலம் பெறப்பட்டுள்ளதாக கூறி துருக்கி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த தகவல்கள் குறித்து துருக்கியின் புலனாய்வாளர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த விசாரணைகளுக்கு உதவ வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவும் சவுதி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை சவுதியின் இளவரசர் மொஹமெட் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், கஷோஹிக்கு நடந்த விடயங்கள் தொடர்பில் அறிந்துக் கொள்ள தாம் தீவிரம் காட்டி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் கஷோஹியின் உறவினர்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், மெலனியா ட்ரம்பிற்கும் உதவி கோரி கடிதங்களை அனுப்பியுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
`