நாங்களும் திருப்பி தாக்குவோம்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்!

450shares

ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியில் கடந்த 14 ஆம் தேதி இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் - இ- முகமது என்ற அமைப்பு வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் சுமார் 45 வீரர்கள் பலியானார்கள். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தார்கள். இந்திய வீரர்கள் மீது நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானை தனிமைப்படுத்தவும், இந்திய வீரர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது இந்திய தலைமை.

அதே சமயம், புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், பயங்கரவாதத்திற்கு எதிராக ஓரணியாக திரள்வோம் எனவும் வலியுறுத்தியுள்ளன. அதேபோல், இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும், தொடர்புடைய தரப்புகளுக்கு காத்திரமான பதிலடி கொடுக்க வலியுறுத்தியும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

இந்த நிலையில், புல்வாமாவில் இந்திய வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தமது கருத்தினை வெளியிட்டுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான். "புல்வாமா விவகாரத்தில் ஆதாரமில்லாமல் எங்கள் மீது பழி சுமத்தாதீர்கள் என தெரிவித்துள்ள இம்ரான், இந்த விவகாரத்தில் தங்களுக்கெதிரான ஆதாரம் ஏதேனும் இருப்பின் நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகவும், இந்தியா தங்கள் மீது தாக்குதல் தொடுத்தால் தாங்களும் திருப்பி தாக்குவோம்" என தெரிவித்துள்ளார். மேலும், 'இந்த விவகாரம் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டியது எனவும் தெரிவித்துள்ளார் இம்ரான்.

முன்னதாக, பாகிஸ்தானுடன் பேசுவதற்கான காலங்கள் கடந்துவிட்டது. இனி தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென இந்திய பிரதமர் மோடி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க