நாங்கள் வேறு வழியை கையாள வேண்டியிருக்கும்: சீனாவை எச்சரிக்கும் உலக நாடுகள்!

158shares

ஜெய்ஷ் - இ - முகமது என்ற பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரை சர்வேத பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு எதிரான நடவடிக்கைகளை சீனா தொடர்ந்து மேற்கொள்ளுமேயானால் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள உலக நாடுகள் இந்த விவகாரத்தில் வேறு வழிகளை கையாள வேண்டியிருக்குமென சீனாவிற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் இந்திய துணை ராணுவப்படை வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் - இ - முகமது என்ற தீவிரவாத இயக்கம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் சுமார் 44 இந்திய வீரர்கள் பலியானார்கள். இந்தியாவை மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கிய இச்சம்பவத்திற்கு பிறகு எல்லை தாண்டிய தீவிரவாதத்தினை முற்றாக களையெடுப்பதற்கான வேலைகளை முடுக்கிவிட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதேபோல், ராஜ்ய ரீதியில் தீவிரவாதத்திற்கு ஆதரவளித்துவரும் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளும் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அந்த வகையில், புல்வாமாவில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் - இ - முகமது என்ற தீவிரவாத இயக்கத்தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலில், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரி பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் கடந்த பிப்ரவரி 27ம் தேதி தீர்மானத்தை முன்மொழிந்தன.

பெரும்பாலான நாடுகள் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க தயராக இருந்த போதிலும், மசூத் அசாருக்கு எதிராக தடை கோரும் பரிந்துரையை ஆய்வு செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக கூறி ஆதரிக்க மறுத்துள்ளது.இதன் மூலம் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க உலக நாடுகள் மேற்கொண்ட 4 வது முயற்சியை தடுத்திருந்தது சீனா.

இந்நிலையில், சீனாவின் மேற்காண் நடவடிக்கை குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர் ஒருவர், தீவிரவாதிகளை காப்பாற்றுவதற்காக சீனாவின் உதவியை பாகிஸ்தான் நாடுகிறது. சீனா இதே வழியில் தொடர்ந்து செயல்பட்டால் நாங்கள் வேறு வகையில் இந்த விவகாரங்களை கையாள வேண்டியிருக்குமென தெரிவித்துள்ளார். இது சீனாவிற்கு உலக நாடுகள் விடுத்துள்ள மறைமுக அறிவுறுத்தலாகவே கருதப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க