அமெரிக்கா சென்ற 6 வயது இந்தியச் சிறுமி சுட்டெரிக்கும் வெயிலில் நாவறண்டு பலியான கொடூரம்!

199shares

இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் தஞ்சம் அடைய தாயுடன் சென்ற 6 வயது இந்தியச் சிறுமி மெக்சிகோ எல்லையில் நாவறட்சியால் உயிரிழந்த சம்பவம் தெரியவந்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த ஒரு தாயும் அவரது 6 வயது மகளும் இடைத்தரகர்கள் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் உள்ள அரிசோனா பாலைவனப் பகுதியை வந்தடைந்தனர்.

பாலைவனத்தில் சுட்டெரிக்கும் 108 டிகிரி வெயிலில் தாயும் மகளும் சுற்றித் திரிந்துள்ளனர்.

இவர்களின் காலடித்தடங்களைக் கொண்டு அமெரிக்க குடியுரிமைத்துறை அதிகாரிகள் தீவிரமாக பின்தொடர்ந்துள்ளனர்.

அப்போது தாகத்தில் தவித்த தனது 6 வயது மகளுக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வருவதற்காக அடைக்கலம் தேடிவந்த இந்தியப் பெண் வேறொரு பெண்ணுடன் புறப்பட்டு சென்றார்.

அமெரிக்கா-மெக்சிகோ எல்லைப் பகுதியில் இருந்து சுமார் 27 கிலோமீட்டர் தூரத்தில் லூக்வில்லி என்ற இடத்தின் அருகே கொளுத்தும் வெயிலில் தனியே இருந்த குருப்ரீத் கவுர் என்ற அந்த சிறுமி நாவறண்டு, துடிதுடித்து உயிரிழந்தார்.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் தஞ்சம் அடைய விரும்பி நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் அந்நாட்டின் எல்லைப் பகுதிகளில் குவிந்தவாறு உள்ளனர்.

இப்படி வருபவர்களை லாரிகளில் கள்ளத்தனமாக கடத்தி அழைத்து வருவதற்கு சில இடைத்தரகர்களும் செயல்படுகின்றனர்.

ஆயிரக்கணக்கான டாலர்களை கட்டணமாக பெற்று, இப்படி அழைத்து வரப்படும் அகதிகள் மெக்சிகோ நாட்டு எல்லைப்பகுதியில் உள்ள பாலைவனத்தில் இறக்கி விடப்படுவதுண்டு.

இவ்வாறான ஒரு நிலையிலேயே குறித்த சிறுமியும் அவரது தாயும் ஏமாற்றப்பட்டுள்ளதுடன், அந்த சிறுமி நாவறண்டு, துடிதுடித்து உயிரிழந்த கோர சம்பவமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க