கொரோனா பரவல் காரணமாக திருமணங்கள் மற்றும் இறுதி ஊர்வலங்களுக்கு சீனாவில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் சில மாகாணங்களில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. எனவே, கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சீனாவின் கிராமப்புற பகுதிகளில் திருமணங்கள் மற்றும் இறுதி ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீன தலைநகர் பீஜிங் அருகில் இருக்கும் ஹெபெய் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, மக்கள் வழக்கமாக அதிகளவில் கூடும் நிகழ்வுகளை நிறுத்தும்படி கிராம மக்களிடம் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேபோல, ஷான்ஷி மாகாணத்தில் உள்ள ஜின்ஷோங் நகரத்திலும் பொதுமக்கள் கூடுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அறிகுறிகள் இல்லாமல் சிலருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. எனவே, அதை தடுக்க முன்னெச்சரிக்கையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் நேற்று முதல் அவசரகாலநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது. வட சீனாவை சேர்ந்த இம்மாகாணத்தில் சுமார் 2 கோடிக்கும் மேலானோர் வசிக்கின்றனர்.